சமையலறை

சுவைக்கத் தூண்டும் உதக்கம் - வல்லாரை சட்னி

ச.பிரேமா

நினைவாற்றலை வலுப்படுத்தும் வல்லாரைக் கீரையை எப்படிச் சமைத்தாலும் சில குழந்தைகள், சாப்பிட மறுத்து அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கு வல்லாரையில் சட்னி செய்து தரலாம் என்கிறார் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த ச.பிரேமா. அதைச் செய்யும் விதத்தையும் அவர் விளக்குகிறார்.

என்னென்ன தேவை?

வல்லாரைக் கீரை - 1 கட்டு, வெங்காயம் - 1, பூண்டு - 1, காய்ந்த மிளகாய் - 4, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி, புளி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை - சிறதளவு, உப்பு - தேவைக்கேற்ப, தேங்காய் துருவல் - அரை கப், எண்ணெய் - தாளிக்க.

எப்படிச் செய்வது?

கீரையைச் சுத்தம் செய்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும். வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் எண்ணெயில் வதக்கி வைக்கவும். இதேபோல் பருப்புகள், சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியற்றையும் பொன்னிறமாக வறுக்கவும்.

வதக்கிய பொருட்கள் ஆறியதும் அவற்றுடன் தேவையான அளவு உப்பு, புளி சேர்த்து அரைக்க வேண்டும். பின் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும். இந்த வல்லாரை சட்னியைத் தோசை, இட்லி, சப்பாத்தி ஆகியவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

இதே முறையில் தூதுவளை கீரை சட்னியும் செய்யலாம். இந்த சட்னி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

SCROLL FOR NEXT