சமையலறை

ருசி நிறைந்த ராமநாதபுரம்: பனை ஒடியல் கூழ்

செய்திப்பிரிவு

பனங்கிழங்கின் தோலை நீக்கி அதனை இரண்டாகப் பிளந்து வெயிலில் நன்றாகக் காயவைக்க வேண்டும். இது காய்ந்து கடினமானதும் இதனைப் பனை ஒடியல் என்று சொல்வார்கள். இந்த ஒடியலை அரைத்துப் பெறப்படும் ஒடியல் மாவில் கூழ் தயாரிக்கும் முறை இன்றும் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையில் உயிர்ப்புடன் இருக்கிறது. சைவம், அசைவம் இரண்டு வகையாகவும் ஒடியல் கூழ் தயாரிக்கப்படுகிறது. பனை ஒடியல் கூழ் மற்றும் கடல்பாசி இளநீர் அல்வா செய்யக் கற்றுத் தருகிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யாழினி.

என்னென்ன தேவை?

பனை ஒடியல் மாவு - கால் கிலோ

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 5

மஞ்சள், உப்பு, சீரகம், வெங்காயம், பூண்டு - தேவையான அளவு

புளிக் கரைசல் - அரை கப்

பலாக்கொட்டைகள் - 20

மரவள்ளிக் கிழங்கு, பூசணிக்காய் துண்டுகள் - சிறிதளவு

மீன் - கால் கிலோ (சிறிய ரக மீனாக முள் குறைந்தாக இருக்க வேண்டும்)

எப்படிச் செய்வது?

பனை ஒடியல் மாவை பத்து நிமிடங் களுக்குத் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மரவள்ளிக் கிழங்கு, பலாக் கொட்டை, பூசணிக்காய் துண்டுகளைப் பொடியாக நறுக்கவும். மீன்களைச் சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மிளகு, மஞ்சள், மிளகாய், வெங்காயம், சீரகம் அனைத்தையும் அம்மியில் நன்கு அரைத்துக்கொள்ளவும்.

பெரிய பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் விட்டு அதில் அம்மியில் அரைத்த மசாலா கலவையுடன் மரவள்ளிக் கிழங்கு, பலாக்கொட்டை, பூசணிக்காய் துண்டுகள், சுத்தம் செய்த மீன் ஆகியவற்றைச் சேர்த்து வேகவிடவும். பின்பு புளிக் கரைசலை கொதிக்கும் கலவையில் ஊற்றவும். புளியும் நன்கு கொதித்த பின் ஊற வைத்த ஒடியல் மாவின் மேலுள்ள தண்ணீரை வடித்து ஊற்றிவிட்டுக் கொதிக்கும் கலவைக்குள் ஒடியல் மாவைப் போட்டுக் கிளறவும். கூழ் இறுக்கமாக இருந்தால் அளவான பதத்துக்கு வருவதற்கேற்பக் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மேலும் கிளறினால் சுவையான பனை ஒடியல் கூழ் தயார்.

பனை ஓலையில் பிளா தயாரித்து அதில் கூழை ஊற்றிக் குடித்தால் அதன் சுவையே தனி. மேலும் கூழுக்குத் துணையாகத் தேங்காய் கீற்றுக்களைக் கடித்துக் கொள்ளலாம்.

SCROLL FOR NEXT