சமையலறை

எங்கள் கைமணம்: மண் கல் தோசை

செய்திப்பிரிவு

பழைய தென், வட ஆற்காடு மாவட்டங்களில் குயவர்கள் மண்ணால் அழகிய தோசைக்கற்கள் செய்து விற்பார்கள். நம் பாரம்பரியத்தைச் சொல்லும் அந்த மண் தோசைக்கற்கள் இப்போதும் தீவனூர், மேல்சித்தாமூர் போன்ற ஊர்களின் தேர்த் திருவிழாக்களின்போது கிடைக்கிறது. இவற்றை வாங்கிவந்து தண்ணீரில் குறைந்தது ஒரு வாரமாவது ஊறவைக்க வேண்டும். பின் அதில் விளக்கெண்ணெய், கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒரு எண்ணெயைத் தடவி ஊறவைக்க வேண்டும். பிறகு அவ்வப்போது அதில் தோசை ஊற்றி கல்லைப் பழக்க வேண்டும். பழகிவிட்டால் தோசை நன்றாக வரும்.

தோசை மாவை மிருதுவாக அரைக்க வேண்டும். கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றி நன்றாகப் பரப்பிவிட வேண்டும். திருப்பிப் போட்டு எடுக்க வேண்டும். இந்த தோசை இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது. இந்த மண் கல் தோசை சமணர்களின் வீடுகளில் மிகவும் பிரசித்தமானது.

இதற்குத் தொட்டுச் சாப்பிட, தாளித்துக் கொட்டிய துவையல் மற்றும் தேங்காய்த் துவையல் நன்றாக இருக்கும்.

தாளித்துக் கொட்டிய துவையல் செய்யத் தேவையானவை: வற்றல் மிளகாய் - 10,

புளி - எலுமிச்சை அளவு

கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்

சீரகம், வெல்லம் - தலா அரை டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவைக்கு

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயைச் சேர்த்து வறுக்கவும். அதிலேயே கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டுத் தாளிக்கவும். வறுத்த மிளகாய், புளி, உப்பு, சிறிது தண்ணீர், வெல்லம் இவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். அதில் தாளித்ததைப் போட்டு இரண்டு சுற்று சுற்றி மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். இது ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

- மீனாட்சி கிருஷ்ணகுமார், ராயப்பேட்டை, சென்னை-14

SCROLL FOR NEXT