கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராகி, கம்பு உள்ளிட்ட தினை பொருட்களின் விளைச்சல் அதிகம். இதனால் கிராம மக்கள் தங்களது அன்றாட உணவில் ராகிக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதுவும் விழாக் காலங்களில் ராகியால் செய்யப்படும் சந்திக் களி எனப்படும் கேழ்வரகு இடியாப்பம் தனிச் சுவை கொண்டது. இதைச் செய்யும் முறை குறித்து விளக்கம் அளிக்கிறார் சந்தூரைச் சேர்ந்த கே. ஜமுனாராணி.
என்னென்ன தேவை?
ராகி மாவு - அரை கப், தண்ணீர் - 4 கப், உப்பு - தேவைக்கு ஏற்ப, வெல்லம் - கால் கிலோ, எள், வேர்க்கடலை தலா 200 கிராம், அவரை பருப்பு - 1 கப், தேங்காய் துருவல் - 1 கப்.
செய்முறை:
பாத்திரத்தில் ராகி மாவின் அளவுக்கு இரு மடங்கு தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் ராகி மாவு, உப்பு சேர்த்துக் கட்டியில்லாமல் 5 நிமிடங்கள் கிளறவும். மாவு வெந்து, களி பதத்துக்கு வந்ததும் இறக்கவும். இதை இடியாப்பம் பிழியும் கட்டையில் பிழிந்துகொள்ளவும். வெல்லத்தைப் பாகு காய்ச்சவும். எள், வேர்க்கடலையை வறுத்துப் பொடிக்கவும். அவரைப் பருப்பை வேகவைத்து எடுக்கவும். பிழிந்து வைத்திருக்கும் இடியாப்பத்துடன் வெல்லப்பாகு, எள், வேர்க்கடலைப் பொடி, அவரைப் பருப்பு, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்துப் பரிமாறவும். இனிப்பை விரும்பாதவர்கள், சந்திக்களியைக் காரக் குழம்புடன் சேர்த்துச் சுவைக்கலாம்.