என்னென்ன தேவை?
புழுங்கல் அரிசி,
கடலைப் பருப்பு தலா அரை கப்
முசுமுசுக்கை இலை இரண்டு கைப்பிடியளவு
மிளகு 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் அரை கப்
தேங்காய்த் துருவல் 4 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசியையும் பருப்பையும் ஊறவையுங்கள். நன்றாக ஊறியதும் இவற்றுடன் மிளகு, முசுமுசுக்கை இலை சேர்த்து சற்றுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய்த் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து கெட்டியாகக் கரையுங்கள். இந்த மாவைச் சிறிது எடுத்து, தோசைக் கல்லில் அடையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இரு புறமும் திருப்பிப் போட்டு எடுங்கள். இந்த அடை மற்ற அடைகளைவிட மிகவும் ருசியாக இருக்கும். அனைவருக்கும் ஏற்றது. முசுமுசுக்கை, கிராமங்களில் சாதரணமாக வேலியில் படர்ந்திருக்கும். கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முசுமுசுக்கைப் பொடியை வாங்கி மாவில் கலந்துகொள்ளலாம். இந்த அடை ஆஸ்துமா, இரைப்பு, சளி, இருமல், வரட்டு இருமல் போன்றவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
- ராஜபுஷ்பா