என்னென்ன தேவை?
சோயா உருண்டை - 100 கிராம்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - ஒன்றரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை,
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சோயா உருண்டைகளை வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு பத்து நிமிடம் ஊறவிடுங்கள். அவை நன்றாக ஊறியதும் தண்ணீர் இல்லாமல் பிழிந்துவிட்டு மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றியெடுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்குங்கள்.
வதங்கியதும் உப்பு, தூளாக்கிய சோயா உருண்டை போட்டு வதக்குங்கள். மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி அடுப்பைத் தணித்துவையுங்கள். நன்றாக வதங்கி சிவந்து வந்ததும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கிவையுங்கள். சைவப்பிரியர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு இது. சுறா புட்டு போலவே அசத்தலாக இருக்கும்.
சமையல் குறிப்பு - அம்பிகா