என்னென்ன தேவை?
மைதா, வெண்ணெய், சர்க்கரை - தலா அரை கிலோ
முட்டை - 12
பேக்கிங் பவுடர் - 10 கிராம்
கேராமெல் - 30 மி.லி.
பட்டைத் தூள் - 5 கிராம்
கோக்கோ பவுடர் - 25 கிராம்
ஊறவைத்த உலர் பழங்கள் - அரை கிலோ
பேரீச்சை, காய்ந்த திராட்சை - தலா 50 கிராம்
ஊறவைக்கத் தேவையான பொருட்கள்
டூட்டு ஃப்ரூட்டி, செர்ரி - தலா 50 கிராம்
உலர்ந்த ஆரஞ்சு தோல், உலர்ந்த இஞ்சித் தோல் - தலா 50 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
முந்திரி, மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் - தலா 50 கிராம்
எப்படிச் செய்வது?
ஊறவைத்த உலர் பழங்கள்தான் இந்த கேக் செய்வதற்கு முக்கியம். இதை ஒரு வாரம் முன்னதாகவே தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரையைக் கம்பிப் பதத்துக்குப் பாகு காய்ச்சிக்கொள்ளுங்கள். அதில் டூட்டி ஃப்ரூட்டி, இஞ்சித் தோல், ஆரஞ்சு தோல், செர்ரி அனைத்தையும் முதல் நாள் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். இதை நன்றாக மூடித் தனியாக எடுத்துவையுங்கள். இரண்டாம் நாள் சிறியதாக நறுக்கிய முந்திரி, திராட்சை, பேரீச்சை, மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் ஆகியவற்றைச் சேர்த்து மரக் கரண்டியால் நன்றாக் கலந்துவையுங்கள். இதை அப்படியே ஐந்து நாட்களுக்கு ஊறவிடுங்கள்.
மைதா மாவு, பேக்கிங் பவுடர் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து சலித்துக்கொள்ளுங்கள். சர்க்கரை, வெண்ணெய் இவற்றை நன்கு அடித்துக்கொண்டு முட்டையை ஒன்றன் பின் ஒன்றாக உடைத்துச் சேர்த்துக் கலக்குங்கள். சர்க்கரை நன்றாகக் கரைந்துவரும்வரை அடியுங்கள். இதற்குப் பிறகு கலவையை மிருதுவாகக் கையாள வேண்டும். அடித்துவைத்த கலவையுடன் ஊறவைத்த பழக்கலவை, கேராமெல் சேர்த்து மிருதுவாகப் பிசையுங்கள். பிறகு சலித்த மைதா, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். இதை பேக் செய்யப் பயன்படும் பேக்கிங் டிரேவில் பட்டர் பேப்பர் பரப்பி அதன் மேல் ஊற்றுங்கள். மைக்ரோ வேவ் அவன் - ஐ 180 டிகிரி செண்டிகிரேடில் அரை மணிநேரம் ப்ரீ ஹீட்டில் வைக்கவும்.
கலவையை 180 டிகிரி செண்டிகிரேட் வெப்பநிலையில் அரை மணி முதல் 40 நிமிடங்கள்வரை பேக் செய்து எடுங்கள். சிறிய கத்தியின் முனையை கேக்கில் நுழைக்கும்போது நுனியில் ஒட்டாமல் வந்தால் நன்றாக வெந்துவிட்டது என்று அர்த்தம். இந்த கேக்கை பத்து முதல் பன்னிரெண்டு மணிநேரம் வரை அப்படியே வைத்துப் பிறகு துண்டுகள் போடலாம்.