சமையலறை

நீர் கொழுக்கட்டை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

இட்லி அரிசி - ஒரு கப்

கடுகு, உளுந்து - தலா ஒரு டீஸ்பூன்

ஊறவைத்த கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - கால் கப்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முதலில் அரிசியைத் தண்ணீர் விட்டு ஊறவையுங்கள். ஊறியதும் நன்றாக அரைத்து, அதனுடன் உப்பு சேர்த்துக் கலந்துவையுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுந்து போட்டுத் தாளியுங்கள். மிளகாயைக் கிள்ளிப் போட்டு பிறகு ஊறவைத்த கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேருங்கள். பொரிந்தவுடன் அரைத்துவைத்திருக்கும் மாவைப் போட்டுக் கிளறுங்கள். தீயைக் குறைத்து வைத்து அடிபிடிக்காமல் கிளறுங்கள். கெட்டியானவுடன் தேங்காய்த் துருவலைப் போட்டுக் கிளறி இறக்கிவையுங்கள்.

வாய் அகலமான வாணலியை அடுப்பில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொதிக்கும் நீரில் போடுங்கள். முதலில் ஐந்து அல்லது ஆறு உருண்டைகளைப் போடுங்கள். அவை வெந்து மேலே வந்ததும் அடுத்து சில உருண்டைகளைப் போடுங்கள். இப்படியே எல்லா மாவையும் உருண்டைகளாகப் போட்டு, உருண்டைகளைக் கவனமாகத் திருப்பிவிடுங்கள். வெந்தவுடன் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

தண்ணீரோடு எடுத்து கொழுக்கட்டைகளைச் சாப்பிடும்போது அருமையாக இருக்கும். இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் சாப்பிடலாம். எளிதில் ஜீரணமாகிவிடும்.

- பிருந்தா ரமணி

SCROLL FOR NEXT