நவராத்திரி, சரஸ்வதி பூஜை என்று அடுத்தடுத்து வந்த பண்டிகைகளால் பட்சணங்களும் பலகார வகைகளுமாக வீடு களைகட்டியிருக்கும். இதோ, கூப்பிடு தூரத்தில் தீபாவளி வந்துவிடும். இடையில் இருக்கிற சில நாட்களுக்கு ஆரோக்கியம் நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாமே. வழக்கமாக சாம்பார், பொரியல் என்று சமைத்துச் சாப்பிடுவதைவிட புதுவிதமான உணவு வகைகளை முயற்சிக்கலாமே என்று ஆலோசனை தருகிறார் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த உஷா. தேர்ந்தெடுத்த சில உணவு வகைகளைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.
என்னென்ன தேவை?
பீட்ரூட் துருவல் - 3 கப்
தேங்காய்த் துருவல் - 1 கப்
சர்க்கரை - இரண்டரை கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1 கப்
ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 10
எப்படிச் செய்வது?
பீட்ரூட் துருவலை நெய்யில் வதக்கி, வேகவையுங்கள். பாலை சுண்டக் காய்ச்சி அதில் ஊற்றுங்கள். அடி கனமான வாணலியில் ஒரு கப் தண்ணீர் விட்டு சர்க்கரையைச் சேர்த்து கொதிக்கவையுங்கள். சர்க்கரை கரைந்ததும் ஒரு டீஸ்பூன் பால் ஊற்றிக் கொதிக்கவையுங்கள். சர்க்கரையின் கசடு திரண்டு வரும். அதை நீக்கிவிட்டு, கெட்டி கம்பிப் பாகு பதம் வந்ததும் பாலில் வேகவைத்த பீட்ரூட் துருவலைச் சேர்த்துக் கிளறுங்கள்.
பிறகு தேங்காய்த் துருவல் சேருங்கள். சுருண்டு வரும்போது ஏலக்காய்த் தூள், நெய் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டுங்கள். ஆறியதும் வில்லைகள் போட்டு, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பை அவற்றின் மீது வைத்துப் பரிமாறுங்கள். பீட்ரூட் காயைக் கண்டாலே ஓட்டமெடுக்கும் குழந்தைகள்கூட இந்த பீட்ரூட் பர்பியை விரும்பிச் சாப்பிடுவார்கள். செய்வதும் எளிது.
உஷா