சமையலறை

நவராத்திரி நல்விருந்து! - அவல் வேர்க்கடலை லாடு

செய்திப்பிரிவு

நவராத்திரி பண்டிகையின் மகத்துவம் ஒன்பது நாட்கள் நடக்கும் தேவி வழிபாடு மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் நிவேதனமாக செய்யப்படும் பலகாரங்களும் சேர்ந்ததுதான். பெண்கள் தங்கள் தோழிகளைச் சந்திப்பதற்கான ஒரு ஏற்பாடாகவும் நவராத்திரி பண்டிகை விளங்குகிறது. கொலுவீற்றிருக்கும் பொம்மைகளும் அதைப் பார்க்க வருகைதரும் குழந்தைகளுமாக ஒன்பது நாட்களும் வீடே அமர்க்களப்படும். நம் வீட்டில் கொலு வைக்கவில்லையென்றாலும் தெரிந்தவர்கள் வீட்டு கொலுவில் பங்கேற்பதும் பேரானந்தமே. நவராத்திரி என்றாலே சுண்டல்தான். சுண்டலோடு சேர்த்துப் புதுவிதமான பலகாரங்களையும் செய்து, கொலு பார்க்கவரும் தோழிகளுக்குக் கொடுக்கலாமே என்கிறார் சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த சீதா சம்பத். பல வருட சமையல் அனுபவமும் கைப்பக்குவமும் இணைந்த பலகாரங்களை ருசிக்கத் தயாராகுங்கள்!

அவல் வேர்க்கடலை லாடு

என்னென்ன தேவை?

அவல் - ஒரு கப்

சர்க்கரை - அரை கப்

வேர்க்கடலை, நெய் - தலா கால் கப்

ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்

முந்திரி - 10

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் அவலைக் கொட்டி, குறைந்த தீயில் வறுத்தெடுங்கள். வேர்க்கடலையை வறுத்துத் தோலை நீக்குங்கள். இரண்டையும் தனித்தனியாகப் பொடித்துவைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையைப் பொடித்து, ஏற்கெனவே பொடித்துவைத்திருக்கும் அவல் மற்றும் வேர்க்கடலையை அதனுடன் கலக்குங்கள். முந்திரியை நெய்விட்டு வறுத்துச் சேருங்கள். ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கலந்து வையுங்கள். நெய்யைச் சூடாக்கி இந்தக் கலவையில் விட்டு நன்றாகக் கலந்து உருண்டை பிடியுங்கள்

SCROLL FOR NEXT