தொகுப்பு: தமிழ்
கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சில நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பது நல்லது என்பதால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமாகச் சமைத்துச் சாப்பிடலாம் என்கிறார் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த மாலதி. அவர் கற்றுத்தரும் உணவுப் பொருட்கள் அனைத்தும் சமைக்க எளிமையானவை, சத்து நிறைந்தவை.
சிறுதானிய அப்பம்
ஒரு கப் கோதுமை மாவுடன் அரை கப் அரிசி மாவு, அரை கப் தேங்காய்த் துருவல், சிறிதளவு முந்திரி, பாதாம், வால்நட் (மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்துச் சேருங்கள்) சிறு துண்டுகளாக நறுக்கிய இரண்டு பேரீச்சம்பழம், ஒரு சிட்டிகை ஏலப்பொடி, ஒரு வாழைப்பழம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.
முக்கால் கப் வெல்லத்தைக் காய்ச்சி வடிகட்டி மாவில் ஊற்றிக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளுங்கள். இதை எண்ணெய்யில் கரண்டியால் ஊற்றியும் சுட்டெடுக்கலாம் அல்லது குழிப்பணியாரச் சட்டியில் எண்ணெய் அல்லது நெய்விட்டும் சுடலாம்.