சமையலறை

தலைவாழை: நூல்கோல் சப்ஜி

செய்திப்பிரிவு

மாசி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது. வெயிலில் அதிகமாக அலைந்து திரிந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதைச் சமப்படுத்த போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதுடன் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நூல்கோலில் நீர்ச்சத்துடன் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகளும் உள்ளன. இந்தக் காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். நூல்கோல் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை போரூரைச் சேர்ந்த ராஜகுமாரி.

என்னென்ன தேவை?

நூல்கோல் - 2
பச்சைப் பட்டாணி - 5 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த் தூள், எலுமிச்சைசாறு - தலா 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
தனியா பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
அரைப்பதற்கு
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு

எப்படிச் செய்வது?

வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டுச் சீரகத்தைப் போட்டுத் தாளியுங்கள். அதில் தனியா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி நூல்கோலைச் சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து வதக்குங்கள். பின்னர் தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவிடுங்கள். நூல்கோல் முக்கால்வாசி வெந்த பிறகு பச்சைப் பட்டாணியைச் சேர்த்து வேகவிடுங்கள். அரைப்பதற்குக் கொடுத்த பொருட்களை அரைத்து நூல்கோலுடன் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்ததும் எலுமிச்சைச் சாறு கலந்து மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள்.

SCROLL FOR NEXT