நிபந்தனையற்ற அன்பு காதலில்தான் சாத்தியம் எனப் பலர் நம்புவதைக் காதலர் தினக் கொண்டாட்டங்கள் நிரூபிக்கின்றன. மனத்துக்குப் பிடித்தவர்களுக்கு விருப்பமானதைச் சமைத்துத் தருவதும் காதல்தான் எனச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா செல்வகுமார். ஆண், பெண் என்கிற பேதமின்றி இருவருமே தங்களுக்குப் பிடித்தவர்களுக்குச் சமைத்துத்தரும் வகையில் எளிய காதலர் தின சமையல் குறிப்புகளை அவர் தருகிறார்.
என்னென்ன தேவை?
வறுத்த ரவை - அரை கப்
மைதா - அரை கப்
பீநட் பட்டர், ஜெம்ஸ் மிட்டாய் - அலங்கரிக்கத் தேவையான அளவு
பொடித்த சர்க்கரை
- அரை கப்
ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரிப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
உப்பு - சிட்டிகை
வெண்ணெய் - 50 கிராம்
சூடான பால் - தேவைக்கு
எப்படிச் செய்வது?
அகலமான பாத்திரத்தில் எண்ணெய், அலங்காரப் பொருட்கள் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து, சூடான பால் தெளித்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவை 15 நிமிடங்கள் மூடிவையுங்கள். பிறகு மாவைத் தடிமனாகத் திரட்டி, இதய வடிவ கட்டரால் வெட்டி, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள். அவற்றின் மீது பீநட் பட்டரைத் தடவி ஜெம்ஸ் மிட்டாய்களை ஒட்டி, பரிமாறுங்கள்.