தொகுப்பு: எஸ்.கே.ரமேஷ்
மயக்கும் மாங்காய் சமையல்
மாங்காய்க்கு மயங்காதோர் உண்டோ! சேலம் என்றவுடனேயே நினைவுக்கு வருவது ருசியான மாம்பழம்தான். உணவில் மாங்காய், மாழ்பழத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சேலத்துக்காரர்கள். மாங்காய், மாம்பழத்தில் செய்யக்கூடிய சில உணவு வகைகளைச் செய்யக் கற்றுத் தருகிறார் கிருஷ்ணகிரி மேகலசின்னம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜி. ஜெயலட்சுமி.
மாம்பழப் பாயசம்
என்னென்ன தேவை?
அல்போன்சா மாம்பழம் - 2, நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் - தேவைக்கு, பால் - ஒரு டம்ளர், சேமியா - 100 கிராம், முந்திரிப் பருப்பு, பாதாம் - தலா 10, உலர் திராட்சை - 10, ஏலக்காய் - 2, நெய், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
சிறிதளவு தண்ணீரில் சேமியாவை வேக வைத்துக்கொள்ளுங்கள். மாம்பழத்தின் தோல், கொட்டைகளை நீக்கி, மிக்சியில் கூழாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் பாதாம், முந்திரி, உலர் திராட்சை போட்டு வறுத்துக்கொள்ளுங்கள்.
அதில் அரைத்து வைத்துள்ள மாம்பழக்கூழ், பால், வெல்லம் சேருங்கள். சேமியா கலவை வெந்ததும் அதை மாம்பழக் கலவையுடன் கலந்து சூடாகப் பரிமாறுங்கள்.