சமையலறை

விதவிதமா மஞ்சள் சமையல்: மஞ்சள் சீரகச் சோறு

செய்திப்பிரிவு

தொகுப்பு: ப்ரதிமா

பசும்மஞ்சளைப் பொங்கல் பண்டிகையின்போதுதான் பலரது வீடுகளிலும் பார்க்க முடியும். அதுவும் சம்பிரதாயத்துக்கு ஒரு மஞ்சள் கொத்தை வாங்கிவைப்பார்கள்; பொங்கல் பானையில் கட்டுவார்கள். சிறந்த கிருமிநாசினியான மஞ்சளை அவ்வப்போது சமையலில் பயன்படுத்துவது நல்லது என்று சொல்வதுடன் பச்சை மஞ்சளில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையைத் தருகிறார் சென்னை போரூரைச் சேர்ந்த சுதா செல்வகுமார்.

மஞ்சள் சீரகச் சோறு

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி - 1 கப், பச்சை மஞ்சள் துருவல் - அரை கப், சீரகம் - 1 டேபிள் ஸ்பூன், சீரகத் தூள் - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, மிளகுத் தூள் - 1 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, மல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிது, வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

பாசுமதி அரிசியை நெத்துப்பதமாக வடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் சீரகம், கீறிய பச்சை மிளகாய், பச்சை மஞ்சள் ஆகியவற்றைப் போட்டு வதக்குங்கள். அதில் தேங்காய்த் துருவல், மிளகுத் தூள், உப்பு, சீரகத் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள். வடித்துவைத்த சோற்றைச் சேர்த்து மெதுவாகக் கிளறிவிடுங்கள். அடுப்பை அணைப்பதற்கு முன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, வேர்க்கடலை ஆகியவற்றைத் தூவி இறக்குங்கள்.

SCROLL FOR NEXT