தொகுப்பு: ப்ரதிமா
பசும்மஞ்சளைப் பொங்கல் பண்டிகையின்போதுதான் பலரது வீடுகளிலும் பார்க்க முடியும். அதுவும் சம்பிரதாயத்துக்கு ஒரு மஞ்சள் கொத்தை வாங்கிவைப்பார்கள்; பொங்கல் பானையில் கட்டுவார்கள். சிறந்த கிருமிநாசினியான மஞ்சளை அவ்வப்போது சமையலில் பயன்படுத்துவது நல்லது என்று சொல்வதுடன் பச்சை மஞ்சளில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையைத் தருகிறார் சென்னை போரூரைச் சேர்ந்த சுதா செல்வகுமார்.
மஞ்சள் லட்டு
என்னென்ன தேவை?
உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப், உலர் பூசணி விதை அல்லது வெள்ளரி விதை - 1 டீஸ்பூன், பாதாம் (பொடித்தது) - 1 டேபிள் ஸ்பூன், முந்திரி - 2 டேபிள் ஸ்பூன், நெய் - தேவைக்கு, டூட்டி ஃபுருட்டி - 1 டீஸ்பூன், பேரீச்சை (விதை நீக்கியது) - 2 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - 2 டீஸ்பூன், சர்க்கரை - 1கப், பச்சை மஞ்சள் துருவல் - 1 கப், பொட்டுக்கடலைப் பொடி - கால் கப்
எப்படிச் செய்வது?
வாணலியில் நெய் விட்டுச் சூடானதும் மஞ்சள் துருவலைச் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் தேங்காய்த் துருவல், முந்திரி, உலர் பூசணி விதை அல்லது வெள்ளரி விதை, பாதாம், டூட்டி ஃபுருட்டி, பேரீச்சை, ஏலக்காய்ப் பொடி - 2, சர்க்கரை, பொட்டுக்கடலைப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள். சூடு பொறுக்கும் அளவுக்குக் கலவை ஆறியதும் லட்டுகளாகப் பிடித்துப் பரிமாறுங்கள்.