சமையலறை

தலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து - செட்டிநாட்டு மீன் குழம்பு

செய்திப்பிரிவு

தொகுப்பு, படங்கள்: வி.சாமுவேல்

எப்போதும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே உணரவும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தவைதாம் பண்டிகைகள்.

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் என்றாலும் அனைத்துமே மகிழ்ச்சியையும் மனித நேயத்தையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்டவை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையும் அன்பையும் சமாதானத்தையும் பரப்பத் தவறுவதில்லை.

அவற்றுடன் சேர்த்து நாவூறச்செய்யும் பலகாரங்களையும் சேர்த்தே இந்தப் பண்டிகை நமக்குப் பரிசாகத் தருகிறது. கிறிஸ்துமஸ் நாளன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த வி. செல்வி.

செட்டிநாட்டு மீன் குழம்பு

என்னென்ன தேவை?

சங்கரா மீன் - அரை கிலோ
புளி - எலுமிச்சைப்பழ அளவு
தக்காளி, வெங்காயம் - தலா கால் கிலோ
பச்சை மிளகாய் - 5
பூண்டு - ஒரு முழுப் பூண்டு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
குழம்பு மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்
தனி மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன்
வெந்தயம், சோம்பு, கடுகு - தலா அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

மீனைக் கழுவி வைக்க வேண்டும். புளியைத் தண்ணீரில் கரைத்துக்கொள்ள வேண்டும். வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி அதில் வெந்தயம், சோம்பு, கடுகு ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்க வேண்டும். அதில் வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் போட்டு நன்கு வதக்க வேண்டும். அதன் பிறகு பூண்டைப் போட்டு வதக்க வேண்டும். கரைத்து வைத்த புளித் தண்ணீரில் குழம்பு மிளகாய் தூள், தனி மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து ஊற்றி, மூட வேண்டும். 20 நிமிடங்கள்வரை நன்றாகக் கொதித்ததும் மீன் துண்டுகளை அதில் போட்டுக் கொதிக்கவிட வேண்டும். மீன் வெந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லியைத் தூவி இறக்கி வைக்க வேண்டும்.

SCROLL FOR NEXT