சமையலறை

தலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து - வனிலா கேக்

செய்திப்பிரிவு

தொகுப்பு, படங்கள்: வி.சாமுவேல்

எப்போதும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே உணரவும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தவைதாம் பண்டிகைகள்.

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் என்றாலும் அனைத்துமே மகிழ்ச்சியையும் மனித நேயத்தையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்டவை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையும் அன்பையும் சமாதானத்தையும் பரப்பத் தவறுவதில்லை.

அவற்றுடன் சேர்த்து நாவூறச்செய்யும் பலகாரங்களையும் சேர்த்தே இந்தப் பண்டிகை நமக்குப் பரிசாகத் தருகிறது. கிறிஸ்துமஸ் நாளன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த வி. செல்வி.

வனிலா கேக்

என்னென்ன தேவை?

மைதா மாவு - 2 கப்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
உப்பில்லாத
வெண்ணெய் - முக்கால் கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
முட்டை - 3
பால் - ஒரு கப்
வனிலா எசென்ஸ் - ஒரு துளி
ஐசிங் சர்க்கரை - 2 டீஸ்பூன்
ஹெவி வைப்பிங் கிரீம் - அரை கப்

எப்படிச் செய்வது?

மைதா, பேக்கிங் பவுடர், உப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்துச் சலித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் முட்டைகளை உடைத்து அதில் ஊற்றி நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். அதில் பால், வனிலா எசென்ஸ் சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும்.

இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய டிரேயில் ஊற்றி 350 டிகிரி வெப்பநிலையில் அவனில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். ஹெவிவைப்பிங் கிரீம், ஐசிங் சர்க்கரை, அரை டீஸ்பூன் வெனிலா எசென்ஸ் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்க வேண்டும்.

நன்கு நுரை வரும் அளவுக்கு அடித்துக்கொள்ள வேண்டும். கேக் நன்றாக வெந்ததும் அவனில் இருந்து எடுத்து, சூடு ஆறியதும் இரண்டு துண்டுகளாக வெட்டி, ஒரு துண்டின் மேல் கலந்துவைத்த கிரீமை லேயர் போட வேண்டும். அதன் மேல் மற்றொரு துண்டை வைத்து அதன் மேல் மறுபடியும் கிரீமைத் தடவ வேண்டும்.

SCROLL FOR NEXT