தொகுப்பு: ப்ரதிமா
தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது.
தீபத் திருநாளன்று வீடுகளில் விளக்கேற்றி வைப்பதுடன் பொரி உருண்டை, அப்பம் போன்றவற்றைச் ஜோதி வடிவான இறைவனுக்குப் படைப்பார்கள். எளிமையே உன்னதம் என்ற தத்துவத்தை இந்தப் படையல் உணர்த்தும். தீபத் திருநாள் படையலில் சிலவற்றைச் செய்யக் கற்றுத்தருகிறார் சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி.
அவல் பாயசம்
என்னென்ன தேவை?
அவல் - 1 கப்
பால், சர்க்கரை - தலா 2 கப்
ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை - தலா 10
மில்க் மெய்ட் - 2 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
அவலை லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துப் பிழிந்தெடுங்கள். அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கொதிக்கவிடுங்கள்.
பால் கொதித்ததும் அதில் அவல், சர்க்கரை, மில்க் மெய்ட் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.
நெய்யில் முந்திரி, திராட்சை இரண்டையும் வறுத்து, பாயசத்தில் சேர்த்து இறக்குங்கள்.