சரிவிகித உணவைச் சாப்பிட்டால் ஆரோக்கியத்துடன் வாழலாம் எனத் தெரிந்தாலும் பலர் அதைக் கடைபிடிப்பதில்லை. சோறு சாப்பிட் டால் குண்டாகிவிடுவோம், பருப்பு வாயுத் தொல்லையைத் தரும் என்று தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து, சமச்சீரற்ற உணவைச் சாப்பிட்டு பலவித நோய்கள் நுழைய வாசலைத் திறந்துவைக்கின்றனர். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால்தான் சிக்கலே தவிர, அளவோடு சாப்பிட்டால் வளமாக வாழலாம் என்கிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். பருப்பு வகைகளுக்கு அன்றாடச் சமையலில் இடம் வேண்டும் என்று சொல்லும் அவர் பருப்பு உணவு சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார்.
பருப்பு உருண்டை
என்னென்ன தெவை?
துவரம் பருப்பு - 200 கிராம், பொடித்த மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - ஒன்றரை மூடி, பெருங்காயம், மஞ்சள் பொடி - தலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
துவரம் பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்துக் கெட்டியாக ரவை பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள். மாவுடன் தேங்காய்த் துருவல், மிளகு - சீரகப் பொடி, பெருங்காயம், மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையுங்கள். மாவைச் சிறிய சீடை அளவுக்கு உருட்டி இட்லித்தட்டில் வைத்து ஆவியில் ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு எடுங்கள். இதை அப்படியே சாப்பிடலாம். அல்லது தேங்காய் எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, அதில் உருண்டைகளைப் போட்டுப் புரட்டியெடுத்தும் சாப்பிடலாம்.
குறிப்பு: லட்சுமி சீனிவாசன் | தொகுப்பு: ப்ரதிமா