பிரியா
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பலரும் உடனடி உணவுக்கும் துரித உணவுக்கும் மாறிவருகின்றனர். சிறுதானிய வகைகளைப் பயன்படுத்துவது குறைவு. சிறுதானியங்களில் சமைக்கப்படும் உணவு சுவையாக இருப்பதில்லை என்று நினைத்தே பலரும் சிறுதானிய வகைகளைப் புறக்கணிக்கின்றனர். சமைக்கும் விதத்தில் சமைத்தால் சிறுதானிய உணவும் ருசிக்கும் என்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த பிரியா. சிறுதானியத்திலும் அறுசுவை உணவு படைக்கலாம் என்று சொல்லும் அவர் அவற்றில் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார்.
தினை உருண்டை
என்னென்ன தேவை?
தினை மாவு - 200 கிராம்
வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
பாதாம் பருப்பு - 5
முந்திரிப் பருப்பு - 3
ஏலக்காய் - 2
பொடித்த வெல்லம் - 50 கிராம்
பொடித்த பனங்கற்கண்டு - 50 கிராம்
எப்படிச் செய்வது?
தண்ணீரில் பொடித்த வெல்லத்தையும் பனங்கற்கண்டையும் சேர்த்துப் பாகு காய்ச்சிக்கொள்ளுங்கள். மிதமான தீயில் வறுத்த தினை மாவுடன் வறுத்த வேர்க்கடலை, பாதாம் பருப்பு, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளுங்கள். தயாரான அரைத்து வைத்த மாவில் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கலந்து சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள்.