தொகுப்பு: ப்ரதிமா
காபி சமையல்
காபி பொடியை வைத்து என்ன செய்ய முடியும்? இதென்ன கேள்வி; சுடச் சுட அருமையான காபியைப் போட்டுக் குடிக்க முடியும் என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆனால், காபி பொடியில் விதவிதமான உணவு வகைகளைத் தயாரித்து ருசிக்கலாம் என்கின்றனர் நம் வாசகிகள். அவர்களில் பத்துப் பேரின் கைவண்ணத்தில் உருவான காபி ரெசிபியை நாம் படிப்பதுடன் சமைத்தும் ருசிப்போம். இவர்கள் அனைவரும் இன்ஸ்டண்ட் காபித் தூளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
சாக்கோ கேக்
என்னென்ன தேவை?
சர்க்கரை – 1 கப்
மைதா – 1 கப்
கோகோ பவுடர் – கால் கப்
பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்
உப்பு – ஒரு துளி
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
முட்டை – 1
தயிர் – அரை கப்
எண்ணெய் – கால் கப்
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்
காபித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
முட்டை, எண்ணெய், தயிர், வெனிலா எசென்ஸ் தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் நன்றாக கலந்துகொள்ளுங்கள். இப்போது முட்டை, எண்ணெய், தயிர், வெனிலா எசென்ஸ் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். பிறகு சூடான அரை கப் தண்ணீரில் காபி தூளைக் கலந்துகொள்ளுங்கள்.
இந்த காபி கலவையை மாவுடன் கலந்துகொள்ளுங்கள். இதனுடன் பொடித்த உலர் பருப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையை பாத்திரத்தில் வைத்து அவனை 180 டிகிரி வெப்பத்தில் பிரிஹீட் செய்து 30 முதல் 40 நிமிடங்கள் வரை வைத்து எடுத்துப் பரிமாறுங்கள்.
- சுமையா