சுதா செல்வகுமார்
தொகுப்பு: ப்ரதிமா
கதம்ப சாதம்
என்னென்ன தேவை?
பச்சரிசி – ஒன்றரை கப்
நறுக்கிய பீன்ஸ், கேரட், பூசணி, வாழைக்காய், கொத்தமல்லி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கத்தரிக்காய், அவரைக்காய் – 1 கப்
பச்சை பட்டாணி, மொச்சை, வேர்க்கடலை, காராமணி – கால் கப்
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – சிறிதளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
சுண்டைக்காய் வற்றல் – 1 டேபிள் ஸ்பூன்
பாசிப் பருப்பு – அரை கப்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – சிறிதளவு
நெய் – தேவைக்கு
தேங்காய்த் துருவல் – அரை கப்
பொடிக்கத் தேவையானவை
துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
தனியா – 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 8
மிளகு, ஓமம் – தலா 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் தண்ணீரில் சிறிது நேரம் ஊறவையுங்கள். அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் குழைய வேகவையுங்கள். வெறும் வாணலியில் தேங்காய்த் துருவலைச் சிவக்க வறுத்துத் தனியே வையுங்கள். அதேபோல் மிளகு, ஓமம் இரண்டையும் வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளுங்கள்.
வறுத்துப் பொடிக்க தந்துள்ள பொருட்களையும் வறுத்துத் தனியாகப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். ஊறவைத்த மொச்சைப்பயறு, காராமணி, பச்சை வேர்க்கடலை ஆகியவற்றை வேகவைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் காய்கறிகளை நறுக்கிப் போட்டு அதில் புளித் தண்ணீர், உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயத் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். காய்கறிகள் வெந்ததும் வேகவைத்த பயறு வகைகளைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். அரைத்த பொடிகளைச் சேர்த்துக் கிளறி நன்றாகக் கொதிக்கவிடுங்கள்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, சுண்டைக்காய் வற்றலை வறுத்து வைத்துக்கொள்ளுங்கள். குழைய வேகவைத்த சோற்றை அகண்ட பாத்திரத்தில் கொட்டி அதில் காய்கறிக் குழம்பை ஊற்றி நன்றாகக் கிளறிவிடுங்கள். பொடித்த ஓமம், மிளகு, கொத்தமல்லி, கறிவேப்பிலை வறுத்த சுண்டைக்காய், வறுத்த தேங்காய்த் துருவல் ஆகியவற்றைத் தூவிக் கிளறுங்கள். இறுதியாக நல்லெண்ணெய், நெய் இரண்டையும் சூடாக்கி சோற்றில் ஊற்றிக் கிளறிப் பரிமாறுங்கள்.