தொகுப்பு: ப்ரதிமா
லேசாகத் தூறல் விழுந்தாலே சளிபிடித்துவிடுமோ எனச் சிலர் பதறுவார்கள். சத்துள்ள சரிவிகித உணவைச் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் மழையோ வெயிலோ நம்மை எதுவும் செய்யாது. பருவத்துக்கு ஏற்ற வகையிலும் உணவுப் பழக்கம் இருக்க வேண்டும் என்கிறார் சென்னை கே.கே நகரைச் சேர்ந்த சீதா சம்பத். மழைக்காலத்துக்கு உகந்த வகையில் மிளகு, தூதுவளை போன்றவற்றில் செய்யக்கூடிய உணவு வகைகளுடன் மாலை நேரத்தில் சூடாகச் சாப்பிட உகந்தவற்றையும் சமைக்கக் கற்றுத்தருகிறார் அவர்.
பிரெட் பக்கோடா
என்னென்ன தேவை?
பிரெட் – 4 ஸ்லைஸ்
கடலை மாவு – கால் கப்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி – சிறிது
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
வெங்காயம் - 1
எப்படிச் செய்வது?
பிரெட் துண்டுகளைப் பொடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையுடன் பொடித்து வைத்துள்ள பிரெட், நறுக்கிய வெங்காயம், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பிசைந்துவைத்துள்ள மாவைக் கிள்ளிப் போட்டு, நன்றாக வெந்ததும் எடுங்கள்.
சீதா சம்பத்
படங்கள்: பு.க.பிரவீன்