தொகுப்பு:ப்ரதிமா
மழைக்காலத்தில் அவ்வளவாகத் தாகம் எடுக்காது. இதனால், பலரும் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீரைக் குடிக்க மாட்டோம். அதனால் வழக்கமான உடலியல் செயல்பாடுகள் பாதிப்படைவதைக்கூட நாம் உணர்வதில்லை. உடலின் நீர்த் தேவையைச் சமாளிக்க நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிடலாம் என்கிறார் சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். நீர்ச்சத்து அதிகமுள்ள முள்ளங்கியில் பராத்தா, பிரியாணி, வத்தக் குழம்பு உள்ளிட்ட சுவையான உணவு வகைகளைச் செய்யவும் அவர் கற்றுத்தருகிறார்.
பொடிமாஸ்
என்னென்ன தேவை?
துருவிய முள்ளங்கி – 2 கப்
தேங்காய் எண்ணெய் – 50 கிராம்
உப்பு – தேவைக்கு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
தாளிக்க
கடுகு, உளுந்தம் பருப்பு – தேவைக்கு
சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் – தலா 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயம் – சிறு துண்டு
நறுக்கிய வெங்காயம் – 1
உடைத்த கடலை – 3 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – அரை மூடி
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் போட்டுத் தாளியுங்கள். பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, அதனுடன் முள்ளங்கியைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு உப்பு, மஞ்சள் பொடியைச் சேர்த்து வதக்கி இறக்கிவிடுங்கள். உடைத்த கடலையைத் தூவி, எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து புரட்டியெடுத்துப் பரிமாறுங்கள்.
படங்கள்: பு.க.பிரவீன்