தொகுப்பு:ப்ரதிமா
ஆகஸ்ட் 15 அன்று பள்ளிகள் தொடங்கிப் பொது இடங்கள் வரை ஏற்றப்படும் மூவண்ணக்கொடியைப் பார்க்கும்போது பலருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு நிறமும் ஒவ்வொன்றைக் குறிக்கும் என்றாலும் மொழி, மதம், இனம் எனப் பல்வேறுபட்ட மக்கள் இந்தியர்கள் என்ற புள்ளியில் ஒன்றிணைவதையும்தான் மூவண்ணம் உணர்த்துகிறது.
அதன் தொடர்ச்சியாக மூவண்ண உணவைச் சமைத்து ருசிப்பது நம்மைச் சுற்றியிருப்பவர்களோடு நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமையக்கூடும் என்கிறார் சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமார். தினசரி உணவையே ஒருமைப்பாட்டுக்கான வழியாக மாற்றும் வகையில் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.
மூவண்ண பாஸ்தா
என்னென்ன தேவை?
ஆரஞ்சு நிறத்துக்கு
பாஸ்தா - அரை கப்
தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்
உப்பு, நெய் - சிறிது
ரெட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
துருவிய சிவப்புக் குடைமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன்
ரெட் பாஸ்தா சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன்
வெள்ளை நிறத்துக்கு
பாஸ்தா - அரை கப்
சீஸ் பாஸ்தா ஸ்பிரெட் (pasta spread)
- 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – சிறிது
வெள்ளை வெங்காயம்
பொடியாக அரிந்தது - 2 டேபிள் ஸ்பூன்
நெய் – சிறிது
பச்சை நிறத்துக்கு
மல்லி - புதினா உப்பு சேர்த்து அரைத்த விழுது - 2 டேபிள் ஸ்பூன்
வேகவைத்த பச்சைப் பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன்
உப்பேறிய வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து அதில் பாஸ்தாவைக் கொட்டி வேக வைத்து எடுத்து குளிர்ந்த நீரில் அலசிக்கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாது.
ஆரஞ்சு நிற பாஸ்தா தயார் செய்ய வாணலியில் நெய் விட்டுச் சூடானதும் குடைமிளகாயைச் சேர்த்து வதக்குங்கள்.
வேகவைத்த பாஸ்தாவுடன் மற்ற பொருட்களையும் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். இதேபோல் மற்ற இரண்டு நிறங்களிலும் பாஸ்தாவைச் செய்யுங்கள். மூன்று நிற பாஸ்தாவையும் அடுத்தடுத்து அழகாக வைத்துப் பரிமாறுங்கள்.