சமையலறை

தலைவாழை: மட்டன் பிரியாணி

செய்திப்பிரிவு

ஈடு இணையில்லா பக்ரீத் விருந்து

தொகுப்பு : நிஷா

அன்புக்கு மதங்கள் கிடையாது என்பது அறுசுவை உணவுக்கும் பொருந்தும். மதங்களைக் கடந்து மனிதர்களிடையே நட்புறவை மேம்படுத்துவதுதான் பண்டிகைகளின் நோக்கம். பண்டிகைகள் அன்று நம் வீட்டில் விதவிதமாகச் சமைத்து ருசிப்பதுடன் அதை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தந்து மகிழ்வது அலாதியானது. பக்ரீத் அன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னையைச் சேர்ந்த ரஷிதா. அவற்றைச் சமைத்து, ருசித்து மகிழ்வோம்.

மட்டன் பிரியாணி

என்னென்ன தேவை?

மட்டன் – அரை கிலோ
இஞ்சி-பூண்டு விழுது – 4 டீஸ்பூன்
யோகர்ட் – 200 கிராம்
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
புதினா – அரை கப்
மல்லித்தழை – 1 கப்
வறுத்த வெங்காயம் – 2
கரம் மசாலா, மிளகாய்த் தூள்
தனியா பொடி – தலா 1 டீஸ்பூன்
சீரகத் தூள், சோம்புத் தூள்,
மஞ்சள் தூள் -
தலா அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
எண்ணெய் – 2 குழிக்கரண்டி
நெய் - 2 குழிக்கரண்டி
பப்பாளி விழுது – 1 டீஸ்பூன்
(மேற்குறிப்பட்ட அனைத்துப் பொருட்களையும் கறியுடன் சேர்த்து நன்றாகக் கலந்து மூன்று மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள்).
பாஸ்மதி அரிசி – அரை கிலோ
ஏலக்காய் – 4
கிராம்பு – 6
பிரியாணி இலை – 3
எண்ணெய் – 3 குழிக்கரண்டி
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளுங்கள். பிறகு பிரஷர் பேனில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். ஊறிய அரிசியை அதில் போட்டு அரிசியுடன் சொல்லப்பட்ட பொருட்கள் அனைத்தையும் சேர்த்து முக்கால் பங்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
குக்கரில் ஒரு கரண்டி நெய்யையும் ஒரு கரண்டி எண்ணெய்யையும் ஊற்றிக்கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் ஊறவைத்த கறிக் கலவையைப் போட்டு 20 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அகலமான பாத்திரத்தில் முக்கால் பங்கு வேகவைத்த அரிசிக் கலவையைப் பரப்பி அதன்மேல் வேகவைத்த மட்டன் கிரேவியை ஊற்றி அதன் மேல் வறுத்த வெங்காயம், புதினா, மல்லித் தழை, வறுத்த முந்திரி, சிறிதளவு பாலில் கரைத்த குங்குமப்பூ ஆகியவற்றைப் பரப்பி பாத்திரத்தை மூடி அடுப்பில் அதிகத் தீயில் ஐந்து நிமிடங்களும் குறைந்த தீயில் 15 முதல் 20 நிமிடங்களும் வைத்து இறக்குங்கள்.

SCROLL FOR NEXT