வெப்பமும் புழுக்கமுமாகத் தகிக்கத் தொடங்கிவிட்டது கோடை. காலையில் காபியைக் கூட சில்லென்று பருகத் தோன்றும் அளவுக்குக் கோடைகாலம் தன் பணியைச் சிறப்பாகவே செய்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள குளிர்ச்சியான உணவு வகைகளைச் சாப்பிடலாம். சென்னையைச் சேர்ந்த கைவினைக் கலைஞரான லதாமணி ராஜ்குமார், சமையல் கலையிலும் வல்லவர். அவர் கற்றுத் தருகிற ஐஸ்கிரீம், சாட் வகைகளே அதற்கு சாட்சி. கோடையைக் குளுமையாக்குவோம் வாருங்கள்!
மாம்பழ ஐஸ்கிரீம்
என்னென்ன தேவை?
மாம்பழக் கூழ் - 2 கப்
பால் - ஒன்றரை லிட்டர்
சர்க்கரை - 450 கிராம்
ஜி.எம்.எஸ் - 1 டேபிள் ஸ்பூன்
லெமன் யெல்லோ கலர் - சிறிதளவு
மாம்பழ எசென்ஸ் - 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
பாலைக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். ஜி.எம்.எஸ். பவுடரைச் சிறிதளவு தண்ணீரில் கரைத்து, கொதிக்கும் பாலில் ஊற்றவும். இறக்கிவைத்து, ஆறவிடவும். ஆறியதும் மாம்பழக் கூழ், ஃபுட் கலர், எசென்ஸ் சேர்த்து நன்றாக அடிக்கவும். ஃப்ரீசரில் வைத்து, செட் ஆனதும் எடுத்துப் பரிமாறவும். விரும்பினால் மாம்பழத் துண்டுகளுடன் சேர்த்துச் சுவைக்கலாம்.