நித்தம் நித்தம் நெல்லுச் சோறு சாப்பிட்டாலும் சலிக்காது. இருந்தாலும் இடையிடையே அக்கம் பக்கத்து ஊர் சமையலையும் ஒரு கை பார்த்துவிடுவது பலரது வழக்கம். அமெரிக்காவில் வசிக்கும் ஜெயலஷ்மி ரஞ்சித், அந்த நாட்டு சமையல் பொருட்களில் நம் ஊர் செய்முறையைக் கலந்து புதுவித உணவு வகைகளை உருவாக்கிவிடுவார். விடுமுறைக்கு இந்தியா வரும்போது விதவிதமாகச் சமையல் செய்தும் அசத்துவார். சுவையில் மட்டுமல்ல, சத்தும் ஆரோக்கியமும் நிறைந்த உணவு வகைகளில்தான் ஜெயலஷ்மி எப்போதும் கவனம் செலுத்துவார். இப்போது நம் ஊர் மால்களிலும் வெளிநாட்டு சமையல் பொருட்கள் கிடைப்பதால் அவற்றை வைத்து செய்யக்கூடிய சில உணவு வகைகளின் செய்முறைகளை ஜெயா நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
கறுப்பு அவரை சூப்
என்னென்ன தேவை?
கறுப்பு அவரை - ஒரு கப்
வெங்காயம், தக்காளி - தலா 1
பூண்டு - 2 பல்
எண்ணெய் - அரை டீஸ்பூன்
இத்தாலியன் seasoning பவுடர் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஊறவைத்த கறுப்பு அவரையை 4 விசில் வரும் வரை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்த வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பூண்டை பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கவும். தக்காளியைச் சேர்த்து வதக்கி, தேவையான உப்பைச் சேர்க்கவும். இத்தாலியன் seasoning பவுடர் என்பது பலவிதமான ஹெர்பல் கலந்த ஒருவகைப் பவுடர். அதைச் சேர்த்துக் கிளறி, வேகவைத்த அவரையைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும். நன்கு கொதிவந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும். சுவையும் மணமும் நிறைந்த இந்த சூப், அனைவைரையும் சாப்பிடத் தூண்டும்.