சமையலறை

வீட்டிலேயே செய்யலாம் கிறிஸ்துமஸ் கேக்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

வெண்ணெய், சர்க்கரை, மைதா - தலா 200 கிராம்

முட்டை - 2

ஆரஞ்சு ஜூஸ் - 50 மி.லி

பேக்கிங் பவுடர் - முக்கால் டீஸ்பூன்

ஆரஞ்சு எசென்ஸ் - 1 டீஸ்பூன்

ஆரஞ்சு கலர் - சில துளி

எப்படிச் செய்வது?

வெண்ணெயில் சர்க்கரையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, கட்டியில்லாமல் கலக்கவும். இதனுடன் ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து நன்றாக அடிக்கவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடரைச் சேர்த்து, மூன்று முறை சலிக்கவும். அப்போதுதான் இரண்டும் நன்றாகக் கலந்துவிடும். அதனுடன் ஆரஞ்சு ஜூஸைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதை வெண்ணெய் கலவையுடன் சேர்த்து கலக்கவும். இந்தக் கலவையுடன் ஆரஞ்சு கலர், எசென்ஸ் இரண்டையும் கலந்து நன்றாகக் கலக்கவும். ஒரு செவ்வக வடிவ டிரேயில் வெண்ணெய் தடவி, அதன் மீது இந்தக் கலவையை ஊற்றவும். இதை 120 டிகிரி வெப்ப நிலையில் மைக்ரோ வேவ் அவனில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். கேக்கின் நடுவில் சிறு மரக்குச்சியால் குத்தி, வெந்துவிட்டதா எனப் பார்த்து எடுக்கவும்.

கோட்டை அலங்காரம்

என்னென்ன தேவை?

ஃப்ரெஷ் கிரீம் - 100 கிராம்

ஐசிங் சர்க்கரை - 200 கிராம்

குறுக்கப்பட்ட பால் - 1 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஃப்ரெஷ் கிரீம், ஐசிங் சர்க்கரை, குறுக்கப்பட்ட பால் மூன்றையும் நன்றாகக் கலக்கவும். செவ்வக வடிவ கேக்கை இரு சம பாகங்களாக வெட்டி, ஒன்றன் மேல் ஒன்றை வைக்கவும். கேக்கைச் சுற்றி ஐசிங்கைப் பரப்பவும். இதன் மேல் பல வண்ண மிட்டாய்கள், பிஸ்கட்டுகளைப் பதிக்கவும். ஓரங்களில் ஐஸ்கிரீம் கோன் வைத்து, கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகளை வைத்து அலங்கரித்துவிட்டால் அருமையான கிறிஸ்துமஸ் கேக் தயார்.

லதாமணி ராஜ்குமார்

SCROLL FOR NEXT