சமையலறை

உருளைக்கிழங்கு பால்கறி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

சிறிய உருளைக் கிழங்கு - கால் கிலோ

வெங்காயம் - 1

தக்காளி - 2

தயிர் - ஒரு கப்

சீரகத் தூள் - 1 டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - ஒன்றரை டீஸ்பூன்

முந்திரி - 10

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

உருளைக் கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து வையுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, உருளைக் கிழங்குகளை அதில் போட்டுப் பொரித்தெடுங்கள். பிறகு வேறொரு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்குங்கள். வதக்கிய பொருட்களை ஆறவைத்து, மிக்ஸியில் அரைத்துகொள்ளுங்கள்.

தக்காளியைத் தண்ணீரில் போட்டு வேகவையுங்கள். ஆறியதும் தோலுரித்து நைசாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காய விழுதைச் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பிறகு தக்காளி விழுதையும் போட்டு வதக்கி அதனுடன் சிறிதளவு சர்க்கரை, மிளகாய்த் தூள் போட்டு வதக்குங்கள். தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்த பிறகு சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்துப் பச்சை வாசனை போன பிறகு கெட்டியான தயிர் ஊற்றிக் கிளறுங்கள். பொரித்துவைத்துள்ள உருளைக் கிழங்குகளை அதில் போட்டு ஐந்து நிமிடம் கழித்து இறக்கிவிடுங்கள். கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறுங்கள். விருப்பம் இருந்தால் ஃபிரஷ் கிரீம் சேர்க்கலாம். இதை சப்பாத்தி, பரோட்டாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

SCROLL FOR NEXT