நீண்டதூரப் பயணங்களின்போதும் வெளிநாட்டுப் பயணங்களின்போதும் நமது முதல் தேடல், தரமான உணவை நோக்கியதாகவே இருக்கும். அது கிடைக்காத நிலையில் என்ன விலை கொடுத்தாவது நல்ல உணவை வாங்கிச் சாப்பிடத் தோன்றும். விமானப் பயணங்களின்போது நமக்கு அறிமுகமான உணவு கிடைத்தாலும், அதன் அசலான ருசி இருக்காது.
மக்களின் இந்தத் தேவையையே தன் தொழிலுக் கான ஆதாரமாகப் பயன்படுத்தி சாதித்துவருகிறார் ராதா தாகா. இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் கோஸ்டா விமானப் பயணிகளுக்குத் தன் நிறுவனத் தயாரிப்புகளான உடனடி உணவு வகைகளைத் தொடர்ந்து விநியோகம் செய்துவருகிறார்.
“உலகிலேயே முதல் முறையாக விமானப் பயணிகளுக்கு இதுபோன்ற ரெடிமேட் உணவைத் தயாரித்துத் தருவது நாங்கள்தான்” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் 73 வயது தொழில்முனைவோரான ராதா.
சென்னை திருவேற்காட்டில் இருக்கிறது ராதாவின் திரிகுணி ஃபுட் நிறுவனம். புளிசாதம், பிசிபேளாபாத், பிரியாணி, பொங்கல், கிச்சடி, உப்புமா, ரவா கேசரி, அவல் பாயாசம் என 15 உணவு வகைகளை இவரது நிறுவனம் தயாரித்துவருகிறது.
பேர் சொல்லும் தரம்
தரம், சுவை, எட்டு நிமிடங்களில் தயாராவது போன்றவை தங்கள் தயாரிப்பின் தனிச் சிறப்புகள் என்கிறார் ராதா. மற்ற நிறுவனங்களைவிட தங்கள் நிறுவன தயாரிப்புகள் தனித்தன்மையுடன் திகழ்வதால் விமான நிறுவனங்கள் விரும்பி வாங்குவதாகக் குறிப்பிடுகிறார்.
“பயணிகளும் எங்களை இ-மெயிலில் தொடர்புகொண்டு நிரந்தர வாடிக்கையாளர் களாகிவருகிறார்கள். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ரெடிமேட் உணவுகளை நாம் அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும். சிலவற்றுக்கு மசாலா சேர்க்க வேண்டியிருக்கும். ஆனால் நாங்கள் டப்பாக்களில் அடைத்துத் தரும் உடனடி உணவில் சிறிது வெந்நீரைச் சேர்த்தால் போதும். எட்டு நிமிடங்களில் ருசியான உணவு தயார். எங்கள் உணவுவகைகளில் வீட்டுக் கைப்பக்குவம் வருவதற்கு மிகவும் மெனக்கெட்டிருக் கிறோம்” என்கிறார் ராதா தாகா.
மேஜிக் என்ற வணிகப் பெயரில் உணவு வகைகளை விமானங்களுக்கு சப்ளை செய்யும் அவர், நீல்கிரிஸ் போன்ற தனியார் பல்பொருள் அங்காடிக் குழுமங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஈஸிஈட்ஸ் (ezeeats) என்ற பெயரில் விநியோகம் செய்துவருகிறார்.
சுயதொழில் ஆர்வம்
சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்று தணியாத தாகத்துடன் இருந்த ராதா, நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கி ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தை 90-களின் தொடக்கத்தில் ஆரம்பித்தார். நெருங்கிய நண்பரின் உதவியால் இத்தாலி நாட்டில் இருந்து ஆர்டர் கிடைத்தது. அதனால் தொழில் செழித்தது. பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும் என்ற நோக்கில் சிறியதாகத் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் இன்று 500 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
“நான் துணி ஏற்றுமதியில் சிறப்பாக விளங்கியபோதும், ஆரம்பகாலத்தில் இருந்தே உணவுத் தயாரிப்பில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வமும் உள்ளுக்குள் இருந்துவந்தது. ஜாம் போன்றவற்றைத் தயாரிக்க நினைத்தபோது பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட முடியாது என்று எச்சரித்தனர். ரெடிமேட் உணவு தயாரிப்பில் முன்னனுபவம் இல்லாதபோதும் துணிந்து இறங்கினேன்” என்று சொல்லும் ராதா, சவால்களை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கிறார்.
பேசிக்கொண்டிருக்கும்போதே தங்கள் நிறுவன தயாரிப்புகளை மேஜைக்குத் தருவித்து, விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறார். கிச்சடி என்றதும், கிச்சடி படம் அச்சிட்டிருக்கும் ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவைத் திறக்கிறார். அதனுள் 60 கிராம் எடையுள்ள உப்புமா பவுடர் இருக்கிறது. அந்தப் பாக்கெட்டைப் பிரித்து டப்பாவில் கொட்டுகிறார். அதன் மீது வெந்நீரை ஊற்றி டப்பாவை மூடி, எட்டு நிமிடங்கள் கழித்துத் திறந்தால், ஆவிபறக்கும் ரவா கிச்சடி மணக்கிறது. அதன் சுவை, வீட்டில் சமைத்த ரவா கிச்சடியைப் போலவே இருக்கிறது. பிரியாணியில் நெய் வாசம் கமகமக்கிறது. இதேபோல் அவல் பாயாசம், உப்புமா அனைத்தும் கச்சிதம். சாம்பார் ருசியும் அமோகம். ஒவ்வொரு உணவு வகையின் ருசிக்குப் பின்னும் அவர்களுடைய உழைப்பு பளிச்சிடுகிறது.
வெற்றி மேல் வெற்றி
வழக்கமாகத் தயார் செய்வது போலவே தொழிற்சாலையில் உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட பிரத்தியேக இயந்திரங்களின் உதவியோடு, அந்த உணவிலிருந்து நீர்ச்சத்து பிரிக்கப்பட்டு, பவுடர் போல் மாற்றப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கினறனர். மீண்டும் வெந்நீர் சேர்க்கும்போது, அது பழைய நிலைக்கே (சாப்பிடுவதற்கு தயார் நிலையில்) மாறிவிடுகிறது.
“உணவுப் பொருட்களின் தயாரிப்பு செலவு அதிகம் என்பதால் விற்பனை விலையும் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் விமானப் பயணம், வெளியூர்ப் பயணம் ஆகியவற்றுக்கு வசதியாக இருப்பதால் நன்கு விற்பனையாகிறது. மேலும் தொழிலதிபர்கள், வசதி படைத்தவர்கள் வீடுகளிலும் அதிக அளவு ஆர்டர் கொடுத்து வாங்குகிறார்கள்” என்கிறார் ராதா.
திருமணத்துக்குப் பிறகு பெண்களுக்கு அதிக சுதந்திரம் தராத மார்வாடி இனத்தைச் சேர்ந்த ராதா, உத்தரப் பிரதேச மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவருடைய தந்தை ஐ.ஏ.எஸ். அதிகாரி. கணவர், ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர். பெரிய தொழில் நிறுவனங்களில் தலைமைப் பதவியை வகித்தவர். தனது தொழில் நிமித்தமாக ராதா தாகாவுடன், சென்னைக்கு 70-களின் தொடக்கத்தில் இடம்பெயர்ந்தார். 90-களில் வணிகம் தொங்கி, 2012 முதல் விமான நிறுவனங்களுக்கு உணவு வகைகளை விநியோகம் செய்கிறார்.
“உயர்அழுத்த மின்பயன்பாட்டு இணைப்புக்கு மனு செய்துள்ளோம். அது கிடைத்ததும் உற்பத்தி இன்னும் பன்மடங்கு பெருகும்” என்கிறார் நம்பிக்கையுடன்.
“முன் அனுபவம் இல்லாத துறைகளில் கால் பதிப்பது தேவையற்றதுதான். எனினும், துணிச்சலுடன் இறங்கினேன். வெற்றி கிடைத்துள்ளது. வயது ஒரு பொருட்டாகவே இல்லை. என்னை யார் இப்படி இயக்குகிறார்கள் எனத் தெரியவில்லை.
நான் ஒரு கருவி என்பது மட்டும் புரிகிறது. என் இலக்கு, உணவுப் பொருள்களை சாதாரண மக்களும் வாங்கிச் சாப்பிடும் அளவுக்கு விலையைக் குறைக்க வேண்டும் என்பதுதான். அதற்காகக் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றபடி விடை கொடுக்கிறார் ராதா தாகா.