கோடைக் காலத்தில் பொதுவாக திரவ உணவு வகைகளைத்தான் பலரும் விரும்புவார்கள். இந்த நேரத்தின் திட உணவின் அளவு குறைவதும் இயல்புதான். உடலிலிருந்து அதிக அளவில் வெளியேறும் வியர்வையால் உடலில் நீர்ச்சமநிலை பாதிக்கப்படும். அதைச் சமன்படுத்தத்தான் திரவ உணவைச் சாப்பிடத் தோன்றுகிறது.
“வீட்டிலேயே விதவிதமாக ஜூஸ் செய்து குடிப்பது ஆரோக்கியத்துக்கும் பர்ஸுக்கும் நல்லது. ஸ்குவாஷ் வகைகளைச் செய்துவைத்துக்கொண்டால் தேவைப்படும்போது தண்ணீர் சேர்த்துக் குடிக்கலாம்” என்கிறார் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அம்பிகா. நீர் மோர், பானகம் போன்ற எளிய பானங்களுடன் அம்பிகா கற்றுத்தருகிற பானங்களையும் அருந்தி, கோடையைக் குளிர்ச்சியாக்குவோம்.
சப்போட்டா மில்க் ஷேக்
என்னென்ன தேவை?
சப்போட்டா - கால் கிலோ
குளிர்ந்த பால் - ஒன்றரை கப்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
பூஸ்ட் - ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
சப்போட்டா பழங்களைத் தோல் நீக்கி, விதைகளை எடுத்துவிடுங்கள். பழங்களைத் துண்டுகளாக்கி அவற்றுடன் குளிர்ந்த பால், பூஸ்ட், சர்க்கரை சேர்த்து அடித்துக் கொள்ளுங்கள். பூஸ்ட் சேர்ப்பதால் நிறமும் சுவையும் புதுமையாக இருக்கும். சப்போட்டா பழத்தைச் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த மில்க் ஷேக்கை விரும்பிச் சுவைப்பார்கள்.