என்னென்ன தேவை?
சிவப்பரிசி - ஒன்றரை கப்
ஜவ்வரிசி - கால் கப்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
சீரகம் - 2 டீஸ்பூன்
ஓமம் - அரை டீஸ்பூன்
சிவப்பு கலர் - சிறிது (விரும்பினால்)
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சிவப்பரிசியை ஆறு மணி நேரம் ஊறவையுங்கள். அதேபோல் ஜவ்வரிசி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை ஊறவையுங்கள். ஊறிய அரிசியைத் தண்ணீர் வடித்து, அரையுங்கள். அரிசி பாதி அரைந்தவுடன் ஜவ்வரிசி, பச்சை மிளகாய், சீரகம், ஓமம், உப்பு சேர்த்து மையாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் மாவுக்கு மூன்று கப் தண்ணீர் என்ற அளவில் நீரை ஊற்றிக் கொதிக்கவையுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த மாவைச் சிறிது சிறிதாக ஊற்றிக் கைவிடாமல் கிளறுங்கள். அதனுடன் பெருங்காயத் தூள் சேர்த்து, தீயைக் குறைத்து வைத்துக் கிளறுங்கள். மாவு மேலே தெறித்து விழாமல் கவனமாகக் கிளற வேண்டும். மாவு நன்றாக வெந்ததும் இறக்கிவையுங்கள். விரும்பினால் ஃபுட் கலர் சேர்த்துக்கொள்ளலாம்.
கைபொறுக்கும் அளவுக்கு ஆறியதும் முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி மாவை அதனுள் போட்டு மெல்லிய பருத்தித் துணியில் பிழிந்து வெயிலில் காயவிடுங்கள். ஓரளவு காய்ந்ததும் திருப்பிப் போட்டு காயவிடுங்கள். நன்றாகக் காய்ந்த பிறகு காற்றுப் புகாத டப்பாவில் போட்டுவையுங்கள். இந்த சிவப்பரிசி வடாம் ஒரு வருடம் வரை கெடாது.
சுதா செல்வகுமார்