தமிழர்களின் அறுவடைத் திருநாள் பொங்கல் என்றால் கேரள மக்களின் அறுவடைத் திருநாள் ஓணம். பருவமழை முடிந்ததும் கொண்டாடப்படுகிற இந்த விழாவை சாதி, மத பேதமின்றி அனைவரும் கொண்டாடுவார்கள்.
இந்தப் பண்டிகையின் மற்றுமொரு சிறப்பு ஒன்பது வகை சுவைகளில் தயாரிக்கப்படும் உணவு. கிட்டத்தட்ட 64 வகையான உணவு நிறைந்த அந்த விருந்தை ‘ஓண சத்யா’ என்பார்கள். ஓணம் விருந்தில் சிலவற்றின் செய்முறையைத் தருகிறார் நெய்வேலியைச் சேர்ந்த லீனா தம்பி.
என்னென்ன தேவை?
பலாப்பழச் சுளைகள் - 15
தேங்காய் - 2
வெல்லம் - முக்கால் கிலோ
நெய் - 300 கிராம்
முந்திரி - 50 கிராம்
திராட்சை - 50 கிராம்
ஜவ்வரிசி - 100 கிராம்
ஏலக்காய் - 5
எப்படிச் செய்வது?
பலாப்பழத்துக்கு மலையாளத்தில் சக்க என்று பெயர். பலாப்பழச் சுளைகளைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை உடைத்துப் பால் எடுக்கவும். ஜவ்வரிசியை வேகவைத்துக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய்விட்டு, வெல்லத்தைப் போட்டுச் சூடேற்றி பாகு வரும் வரை கிளறவும். அதில் வேகவைத்த ஜவ்வரிசியையும், பலாப்பழச் சுளைகளையும் போட்டு, கம்பிப் பதம் வரும் வரை நன்றாகக் கலக்கிக் கொண்டே இருக்கவும். அதில் தேங்காய்ப் பாலை விட்டுக் கொதிக்க வைக்கவும். நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி, தேங்காய்ச் சில்லுகளைச் சேர்த்து, ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கிளறவும். நெய்விட்டு இறக்கினால் சக்க பிரதமன் தயார்.
குறிப்பு: லீனா தம்பி