ப
ள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எப்போதும் சத்து நிறைந்த உணவைக் கொடுக்க வேண்டும். தேர்வு நாட்களின்போது அவர்களின் உணவில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். துரித உணவையும் டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் உணவையும் தவிர்த்துவிட்டு, வயிற்றுக்குத் தொந்தரவு தராத இயற்கை உணவைத் தருவதே சிறந்தது. “இயற்கை உணவு என்றாலே பெரும்பாலான குழந்தைகள் சாப்பிட மறுத்து அடம்பிடிப்பார்கள்.
ஆனால், அவற்றைக் குழந்தைகளுக்குப் பிடித்தவகையில் சுவையாகச் சமைத்துக் கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள்” என்று சொல்லும் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா, தேர்வு நேரத்தில் சாப்பிடக்கூடிய சில உணவு வகைளின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
மூலிகை இட்லி
இட்லி மாவு - 1 கப்
தூதுவளை, துளசி, ஓமவள்ளி - தலா 1 கைப்பிடி
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள், உப்பு - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன் (சிவக்க வறுத்து)
நெய் - 2 டீஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு
மூலிகைகளை அலசி, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். வாணலியில் நெய் விட்டு கடுகு, உளுந்து போட்டுத் தாளித்து, வெங்காயம் சேர்த்துச் சிவக்க வதக்குங்கள். நறுக்கி வைத்துள்ள மூலிகைகளைச் சேர்த்து சுருள வதக்கவும். பின் மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து வதக்கி இறக்குங்கள்.
இட்லித் தட்டில் கொஞ்சமாக இட்லி மாவை ஊற்றி அதன் மேலே ஒரு டீஸ்பூன் வதக்கிய மூலிகைக் கலவையை வைத்து அதன் மேல் மீண்டும் இட்லி மாவை ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுங்கள். இட்லியை விரும்பிய வடிவங்களில் நறுக்கி அதன் மீது கடுகு, உளுந்து தாளித்துக் கொட்டி, தேங்காய்த் துருவலைத் தூவிப் பரிமாறுங்கள். தொட்டுக்கொள்ள எதுவும் இல்லாமலே மூலிகை இட்லியைச் சாப்பிடலாம்.