சமையலறை

சிக்கன் தொக்கு

சி.காவேரி மாணிக்கம்

தேவையானவை:

சிக்கன் - அரை கிலோ

பெரிய வெங்காயம் - 1 பெரிய கப் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

மல்லித்தூள் - 3 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

கறிமசாலாப்பட்டை - 1

தக்காளி - 1 சிறிய கப் (பொடியாக நறுக்கியது)

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவைக்கு

செய்முறை:

* எண்ணெய் காய்ந்ததும், கறிமசாலாப்பட்டையில் உள்ள அனைத்தையும் போட்டு தாளிக்க வேண்டும். பின்னர், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் விரைவில் வதங்குவதற்காக சிறிது உப்பு சேர்க்கவும். ஸ்டவ்வை சிம்மில் வைத்து, மூடிபோட்டு 4 நிமிடங்கள் வேகவைத்தால், வெங்காயம் நன்கு வதங்கிவிடும்.

* அதில், இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பின்னர், தக்காளி சேர்த்து வதக்கி, கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.

* தக்காளி நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை நீங்கியதும், அரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கலக்கவும். அதில், சிக்கன் மற்றும் உப்பு சேர்த்து, மிதமான தீயில் மூடிபோட்டு வேகவைக்கவும்.

* 5 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து, இன்னும் 5 நிமிடங்களுக்கு சிக்கனை வேகவிடவும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பொதுவாக, தொக்கு என்றாலே வெங்காயம் எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறார்களோ, அதே அளவுக்குத் தக்காளியையும் பயன்படுத்துவர். ஆனால், இந்தத் தொக்கில் வெங்காயம் அதிகமாகவும், தக்காளி குறைவாகவும் சேர்த்திருப்பதால் புதுவிதமான சுவை கிடைக்கும்.

இந்த செய்முறையின் வீடியோ இதோ...

SCROLL FOR NEXT