சமையலறை

பொங்கல் படையல்: இளநீர் சர்க்கரைப் பொங்கல்

செய்திப்பிரிவு

தமிழர்களின் மனத்துக்கு நெருக்கமான பண்டிகைகளில் பொங்கலுக்கு எப்போதும் முதலிடமே. இந்த உலகமே உழவர்களின் பின்னால் செல்ல, உழவர்களோ விவசாயத்துக்காகச் சூரியனையும் கால்நடைகளையும் நம்பியிருக்கின்றனர். பருவமழை பொய்த்துவிடுவது, வறட்சி, வெள்ளம், புயல், கழுத்தை நெரிக்கும் விவசாயக் கடன் எனப் பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவிலும் விவசாயத்தைத் தங்கள் மூச்செனக் கருதும் விவசாயிகளால்தான் இந்த உலகம் உயிர்ப்புடன் இருக்கிறது.

உழவர் திருநாளன்று விதவிதமான உணவு வகைகளைச் சமைத்து, சூரியனுக்குப் படையலிடுவதுடன் உழவர்களின் வாழ்வு சிறக்கவும் துணைநிற்போம். பொங்கல் பண்டிகையன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த நித்யா பாலாஜி.

இளநீர் சர்க்கரைப் பொங்கல்

என்னென்ன தேவை?

பச்சரிசி – முக்கால் கப்

பாசிப் பருப்பு – கால் கப்

வெல்லம் - 1 கப்

இளநீர் - 2 கப்

தண்ணீர் – 2 கப்

தேங்காய்ப் பால் - 1 டேபிள் ஸ்பூன்

இளநீர் வழுக்கை – அரை கப்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்த் தூள் – 1 டீஸ்பூன்

முந்திரி, திராட்சை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

வெல்லத்தை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அடுப்பில் வைத்துப் பாகு காய்ச்சிவையுங்கள். பாசிப் பருப்பை வெறும் கடாயில், குறைந்த தீயில் பொன்னிறமாக வறுத்துத் தனியே வையுங்கள். அரிசியைக் கழுவி அதனுடன் பாசிப் பருப்பு, இளநீர், தண்ணீர் சேர்த்து குக்கரில் ஐந்து அல்லது ஆறு விசில்விட்டு இறக்கிவிடுங்கள். சூடு ஆறியதும், குக்கரைத் திறந்து அரிசி-பருப்பு கலவையை நன்றாகக் குழைத்துவிட்டு, வெல்லப் பாகு ஊற்றி, மிதமான தீயில் வைத்து ஐந்து நிமிடம் கிளறி அடுப்பை அணைத்துவிடுங்கள். ஒன்றிரண்டாக அரைத்த இளநீர் வழுக்கை, தேங்காய்ப் பால், நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, சூடாகப் பரிமாறுங்கள்.

செம்ம ருசி: மணமணக்கும் மட்டன் ஈரல் வறுவல்

SCROLL FOR NEXT