சமையலறை

பூண்டு குழம்பு

செய்திப்பிரிவு

தேவையானவை:

பூண்டு - 1 கப் (உரித்தது)

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

வெந்தயம் - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

புளி - எலுமிச்சை அளவு (புளிப்பைப் பொறுத்து கூடவோ, குறையவோ சேர்க்கலாம்)

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - தாளிக்க

செய்முறை:

* வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், சீரகம், கடுகு, வெந்தயம் மூன்றையும் போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும், தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும், கறிவேப்பிலை சேர்க்கவும்.

* அதனுடன் பூண்டைச் சேர்த்து, வாசனை வரும்வரை நன்கு வதக்கவும். பூண்டு வதங்கியதும், மஞ்சள் தூள் மற்றும் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர், அதில் புளிக்கரைசலைச் சேர்க்கவும். புளிக்கரைசல் கொஞ்சம் கெட்டிப்பதத்தில் இருப்பது நல்லது.

* பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து, 5 முதல் 7 நிமிடங்கள் வரை மூடி கொதிக்க விடவும். 7 நிமிடங்களுக்குப் பிறகு மூடியைத் திறந்தால், நாம் தாளிக்க ஊற்றிய எண்ணெய் மேலே திரண்டு நிற்கும். இப்போது பூண்டு குழம்பு தயார்.

அடிக்கடி வெளியில் சாப்பிடுபவர்கள், வாயுத் தொந்தரவு இருப்பவர்கள், பாலூட்டும் தாய்மார்கள் வாரம் ஒருமுறை இந்தப் பூண்டுக் குழம்பைச் சாப்பிடுவது நல்லது.

இந்தப் பூண்டு குழம்பின் செய்முறை வீடியோ இதோ...

SCROLL FOR NEXT