சமையலறை

அட பிரதமன்

என்.முருகவேல்

என்னென்ன தேவை?

கோவில்பட்டி அடை - கால் கிலோ

வெல்லம் - முக்கால் கிலோ

தேங்காய் - 4

முந்திரி, திராட்சை - 50 கிராம்

ஏலக்காய் - 5

ஜவ்வரிசி - 150 கிராம்

செவ்வாழைப் பழம் - 1

எப்படிச் செய்வது?

அடையைச் சிறிது சிறிதாக உடைத்து வேகவைத்து, தண்ணீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். செவ்வாழை, ஜவ்வரிசி இவற்றைத் தனித்தனியாக வேகவைத்து எடுக்கவும். தேங்காயை உடைத்து 3 முறை பால் எடுக்க வேண்டும்.

வாயகன்ற பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டுச் சிறிதளவு நெய், தண்ணீர் விட்டுச் சூடேற்றவும். வெல்லம் கரைந்து கொதித்ததும் வேகவைத்த அடையை அதில் போட்டு நன்றாகக் கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். கம்பிப் பதம் வரும் வரை கலக்கிக்கொண்டே வரவும். வேகவைத்த செவ்வாழையைப் பிசைந்து சேர்க்கவும். அதனுடன் வேகவைத்த ஜவ்வரியைச் சேர்த்துக் கிளற வேண்டும்.

மூன்றாம் முறை எடுத்த தேங்காய்ப் பாலை வெல்லப்பாகுடன் கலந்து நன்றாகக் கிளறவும். பின்னர் இரண்டாவது முறை எடுத்த தேங்காய்ப் பாலை விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். இறுதியில் கெட்டியான முதல் தேங்காய்ப் பாலை விட்டு நன்றாகக் கொதிக்கவைக்கவும். அதில் முந்திரி, திராட்சை, பொடியாக நறுக்கிய தேங்காய்ச் சில்லுகளை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். ஏலக்காயைப் பொடித்துச் சேர்த்து, நெய் விட்டு இறக்கினால் அட பிரதமன் தயார்.

குறிப்பு: லீனா தம்பி

SCROLL FOR NEXT