தை மாதத்தில் அதிகமாக விளையக்கூடிய காய்களில் பூசணிக்காயும் ஒன்று. பல்வேறு மருத்துவக் குணங்களைக்கொண்ட பூசணிக்காய், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல்சூட்டைத் தணிக்கும் அருமருந்தான பூசணிக்காயில் செய்யக்கூடிய ஆரோக்கிய உணவு வகைகளைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த சீதா சம்பத்.
ரசவாங்கி
என்னென்ன தேவை?
பூசணிக்காய்த் துண்டுகள் – 2 கப்
புளிக் கரைசல் – அரை கப்
உப்பு – தேவைக்கு
தனியா – 2 டீஸ்பூன்
மிளகாய் – 4
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறு துண்டு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – கால் கப்
கறிவேப்பிலை – சிறிது
வெள்ளை கொண்டைக்கடலை – கால் கப்
முழு மொச்சை – கால் கப்
எப்படிச் செய்வது?
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடானதும் தனியா, மிளகாய், கடலைப் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுத்தெடுங்கள். ஆறியதும் கலவையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு போட்டுத் தாளித்து, சிறு துண்டுகளாக அரிந்துவைத்துள்ள பூசணிக்காயைப் போட்டு வதக்குங்கள். அதில் புளிக் கரைசல், உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போனதும் அரைத்துவைத்துள்ள விழுது, வேகவைத்துள்ள கொண்டைக்கடலை இரண்டையும் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். பின்னர் குழம்பு பதம் வந்ததும் கறிவேப்பிலையைத் தூவி இறக்குங்கள்.