சமையலறை

பொங்கல் படையல்: அரைத்துவிட்ட பொரித்த குழம்பு

ப்ரதிமா

என்னென்ன தேவை?

துவரம் பருப்பு – முக்கால் கப்

நறுக்கிய காய்கறிக் கலவை (புடலை, கத்தரி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அவரை, கொத்தவரை, மொச்சை, பரங்கி) - 2 கப்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

வறுத்துப் பொடிக்க:

மிளகு, சீரகம், துவரம் பருப்பு, தனியா, தேங்காய் - தலா 1 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 3.

தாளிக்க:

எண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு - தலா முக்கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

கறிவேப்பிலை - 1 கொத்து.

எப்படிச் செய்வது ?

மிளகு, சீரகம், துவரம் பருப்பு, தனியா, தேங்காய், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் கொரகொரப்பாகப் பொடித்துத் தனியே வையுங்கள். பருப்பைக் கழுவி, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவையுங்கள்.

வாணலியில் தண்ணீர் ஊற்றி, சாம்பார் தூள், உப்பு, காய்கறிக் கலவை ஆகியவற்றைச் சேர்த்து, மூடி போட்டு வேகவையுங்கள். காய்கறி வெந்தவுடன், பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பொடித்துவைத்துள்ள பொடியைச் சேர்த்துக் கிளறி ஐந்து நிமிடம் கழித்து இறக்கிவிடுங்கள். கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துச் சேர்த்துப் பரிமாறுங்கள். சூடான சாதத்தில் இந்தக் குழம்பை ஊற்றி, சிறிது நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்.

SCROLL FOR NEXT