காலையில் இட்லி, தோசை மதியத்துக்குச் சோறு, குழம்பு சில நேரம் கலந்த சாதம், இரவு மீண்டும் சிற்றுண்டி என எல்லா நாளும் ஒரே மாதிரி இருந்தால் யாருக்குத்தான் சலிப்பாக இருக்காது? அதற்காகத் தினம் தினம் விருந்தும் சமைக்க முடியாதுதான். ஆனால், ஆரோக்கிய உணவும் ஒரு வகையில் விருந்துபோலத்தான் என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி. எளிதில் செய்யக்கூடிய சில ஆரோக்கிய உணவு வகைகளின் செய்முறையை அவர் சொல்கிறார்.
என்னென்ன தேவை?
பாலிஷ் செய்யாத பொன்னி அரிசி – கால் கிலோ
வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 10 பல்
பட்டை – சிறு துண்டு
கறிவேப்பிலை, மஞ்சள் தூள் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
கொத்த மல்லித்தழை, கடுகு - சிறிதளவு
தக்காளி - 2
கடலை எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கழுவிய அரிசியைத் தேவையான அளவு நீர் ஊற்றி குக்கரை மூடமால் அடுப்பில் வையுங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தயத்தைப் பொன்னிறமாக வறுத்து அரிசியுடன் சேருங்கள். அதில் உப்பு, மஞ்சள் தூள் போட்டுக் கொதிக்கவிட வேண்டும். இன்னொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பட்டை, கடுகு இரண்டையும் போட்டுத் தாளிக்க வேண்டும். பிறகு பூண்டு, சிறிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கி, அரிசிக் கலவையுடன் சேர்க்க வேண்டும். கலவை நன்றாகக் கொதிக்கும்போது, கொத்தமல்லித்தழையைச் சேர்த்து குக்கரை மூடிவிட வேண்டும். மூன்று விசில் வந்ததும் இறக்கிவிட வேண்டும்.