பொதுவாக, கிழங்குகளில் வறுவல் செய்து கொடுத்தால் குழந்தைகள் மட்டுமல்ல; பெரியவர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள். ஆனால், உருளைக்குக் கொடுக்கும் இடத்தைக் கருணைக் கிழங்குக்குக் கொடுப்பதில்லை. அதன் காரல் சுவையும் ஒரு காரணம். சமைக்கிற விதத்தில் சமைத்தால் காரல் சுவை தெரியாது என்பதுடன் கருணைக் கிழங்கில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத் தருகிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன்.
மிக்ஸர்
என்னென்ன தேவை?
கருணைக் கிழங்கு – கால் கிலோ
வறுத்த வேர்க்கடலை – 50 கிராம்
பொட்டுக்கடலை - 50 கிராம்
மிளகுப் பொடி, சர்க்கரை – தலா அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – 200 கிராம்
எப்படிச் செய்வது?
கருணைக் கிழங்கைத் தோல் நீக்கிப் பொடியாக அரிந்துவைத்துக் கொள்ளுங்கள். கருணைத் துண்டுகளைத் தண்ணீர் இல்லாதவாறு துணியால் துடைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கருணைத் துண்டுகளைப் போட்டுச் சிவக்கப் பொரித்தெடுங்கள். ஆறிய பின்பு வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகு, உப்பு, பெருங்காயத் தூள், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். கறிவேப்பிலையை எண்ணெய்யில் பொரித்துச் சேர்த்துப் பரிமாறுங்கள்.