குழந்தைகள் தினத்தன்று சிறந்த குழந்தைகளாக அவர்களை வளர்த்தெடுப்பது குறித்தும் குழந்தைகளுக்காக நேரு சொன்ன கருத்துகள் குறித்தும் பலர் பேசுவார்கள். ஆனால், நடைமுறையில் அவற்றில் சிலவற்றையாவது கடைப்பிடிக்கிறார்களா என்பது சந்தேகமே. சின்னச் சின்ன வேலைகளுக்குக்கூடப் பெற்றோரை எதிர்பார்க்காமல் சிலவற்றைக் குழந்தைகள் தாங்களாகவே செய்துகொள்ளலாம்.
அடுப்பில்லாமல் தயார் செய்யக்கூடிய உணவு வகைகளைச் செய்ய அவர்களுக்கு நாம் கற்றுத்தரலாம். தன் அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்ட சில உணவு வகைகளைச் செய்துகாட்டுகிறார் சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த எஸ். பிரதீப். ஐந்தாம் வகுப்புப் படிக்கும் இவர், விடுமுறை நாட்களில் இவற்றில் சிலவற்றைச் செய்து சாப்பிடுவது வழக்கம்.
என்னென்ன தேவை?
பொட்டுக் கடலை - ஒரு கப்
நாட்டுச் சர்க்கரை – அரை கப்
பேரீச்சை விதை நீக்கியது - பத்து
தேன் – சிறிது
ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
பால் பவுடர் - ஒரு டேபிள் ஸ்பூன் லாலிபாப் குச்சிகள் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
மிக்ஸியில் தேன் தவிர மற்றவற்றை ஒன்றாகப் போட்டு அடித்து ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிக்ஸியில் அரைக்க மட்டும் பெரியவர்களை துணைக்கு அழைத்துக்கொள்ளுங்கள். அரைத்த கலவையுடன் தேன் ஊற்றிப் பிசைந்து உருண்டையாகப் பிடித்து, லாலிபாப் குச்சி செருகிப் பரிமாறுங்கள்.