காலிஃபிளவர் போன்று இருக்கும்; ஆனால், அடர் பச்சை நிறத்தில் இருக்கும் அது என்ன என்று கேட்டால் பலரும் ‘புரோக்கோலி’ என்று சரியான பதிலைச் சொல்லும் அளவுக்கு நகரங்களில் பலரது வீடுகளுக்குள் புரோக்கோலி நுழைந்துவிட்டது. நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக விளைவிக்கப்படும் இந்தக் காய், பலவிதச் சத்துக்களைக் கொண்டுள்ளது. மற்ற காய்கறிகளைப் போலவே புரோக்கோலியிலும் விதவிதமாகச் சமைக்கலாம் என்று சொல்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி. சில உணவு வகைகளின் செய்முறையை அவர் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
என்னென்ன தேவை?
புரோக்கோலி - கால் கிலோ
சிறிய வெங்காயம் - 1 கப்
சீரகம் – அரை டீஸ்பூன்
தனியாத் தூள் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, எண்ணெய், கடுகு, உப்பு -தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். பிறகு சிறிய வெங்காயம், கறிவேப்பிலை இரண்டையும் போட்டு நன்றாக வதக்கியபின் தனியாத் தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். (குழம்பு மிகவும் ருசியாக இருக்க வேண்டுமென்றால் ஆட்டுக்கல்லில் அரைக்கலாம்).
வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தபின், கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு புரோக்கோலி துண்டுகளைச் சேர்த்து வதக்கித் தேவையான அளவு உப்பு சேருங்கள். சிறிது தண்ணீர் தெளித்து அரை வேக்காடு வெந்ததும் அரைத்து வைத்துள்ளதைச் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவைத்து இறக்க வேண்டும்.