எதையுமே மாத்தி யோசிக்கிற லட்சுமி சீனிவாசன், சமையலை மட்டும் விட்டுவிடுவாரா என்ன? காலையில் காபி கலக்குவதில் தொடங்கிவிடுகிற இவருடைய கைவண்ணம் அன்றைய நாள் முழுவதையுமே சுவையோடு வைத்திருக்கும். சாதாரண சமையல் பொருட்களை வைத்தே அசாதாரண சுவையோடு சமைக்கும் திறமை இவருக்கு உண்டு. சென்னை டிரஸ்ட்புரத்தில் இருக்கும் அவரது வீட்டுக்குச் செல்ல யாரிடமும் வழி கேட்கத் தேவையில்லை. நாசி தொடும் நறுமணமே அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடும். லட்சுமி சீனிவாசனின் கைவண்ணத்தில் தயாரான இந்த உணவு வகைகளைச் சமைத்து ருசித்தால், நமக்கும் அந்த உண்மை புரியும்.
என்னென்ன தேவை?
நீளமாக நறுக்கிய பலாப்பழ துண்டுகள் - அரை கப்
மஞ்சள் தூள், பெருங்காயம் - தலா 1 சிட்டிகை
புளித் தண்ணீர் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
வறுத்துப் பொடிக்க
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
கொப்பரைத் தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
தாளிக்க
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பொடித்த வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
வறுக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பலாபழத் துண்டுகளைச் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், புளித் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பொடித்த மசாலா, உப்பு, வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும். கலந்த சாதம், ரொட்டி வகைகள், இட்லி, தோசை, பூரி ஆகியவற்றுக்கு ஏற்ற இணை உணவு இது.
குறிப்பு-லட்சுமி சீனிவாசன்