கோடை பிறந்துவிட்டாலே ஒரு நாள் இன்பச் சுற்றுலாவோ ஒரு வார நெடும் பயணமோ கிளம்பிவிடுவது பலரது வழக்கம். வாட்டியெடுக்கும் வெயிலுக்குப் பயந்தவர்கள்கூடத் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முக்கியமான இடங்களுக்குச் சென்றுவருவார்கள். வெளியூருக்குப் பயணப்படும்போது அங்கே கிடைக்கிற சிறப்பு உணவு வகைகளைச் சாப்பிடுவதில் தவறில்லை. அதேநேரம் வயிற்றுக்கு உகந்த சிலவற்றை வீட்டிலேயே சமைத்து எடுத்துச் செல்லலாம் என்கிறார் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சீதா சம்பத். அவற்றில் சிலவற்றைச் சமைக்கவும் அவர் கற்றுத்தருகிறார்.
மசாலா ரொட்டி
கடலை மாவு – 2 கப், கோதுமை மாவு – 1 கப், உப்பு – தேவைக்கு, ஆம்சூர் பொடி – அரை டீஸ்பூன், தனியாப் பொடி – அரை டீஸ்பூன், சீரகப் பொடி – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, ஓமம் – 1 ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது (தேவைப்பட்டால் ) – அரை டீஸ்பூன், நெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய்யைத் தவிர்த்து மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள். அதில் சிறிது தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து பத்து நிமிடம் ஊறவிடுங்கள். பின்னர், மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திபோல் திரட்டுங்கள். இவற்றைத் தவாவில் போட்டு, இருபுறமும் வெந்ததும் நெய் தடவி எடுத்தால் மசாலா ரொட்டி தயார். இந்த மசாலா ரொட்டி இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாமல் மிருதுவாக இருக்கும்.