நாம் அன்றாடச் சமையலில் சேர்த்துக்கொள்ளும் பொருட்களைக் கொண்டே வித்தியாசமான உணவு வகைகளைச் சமைப்பதில் வல்லவர் சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி. பொதுவாகப் பலரும் வேர்க்கடலையில் சட்னியோ துவையலோ அரைப்பார்கள். ஆனால், வேர்க்கடலையில் தோசை செய்யலாம் என்று சொல்லும் இவர், புதுவிதமான பதார்த்தங்கள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார். சத்தும் சுவையும் நிறைந்த இதுபோன்ற உணவு வகைகளை அடிக்கடி சமைத்துக் கொடுத்தால் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.
வேர்க்கடலைத் தோசை
புழுங்கல் அரிசி - 2 கப்
தேங்காய்த் துருவல் - அரை மூடி
வேர்க்கடலை - 1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
புழுங்கல் அரிசி, வெந்தயம், வேர்க்கடலை ஆகியவற்றை நன்றாக ஊறவைத்துக்கொள்ளுங்கள். அவற்றுடன் தேங்காய், உப்பு சேர்த்துத் தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளுங்கள். பின்னர், சுமார் ஒரு மணி நேரம் கழித்துத் தோசைகளாக ஊற்றித் தேவையான அளவு எண்ணெய்விட்டுச் சுட்டெடுங்கள்.