சமையலறை

கமகமக்கும் காஞ்சி சமையல்: தம் பிரியாணி

கோ.கார்த்திக்

ரு பக்கம் சைவம் என்றால் இன்னொரு பக்கம் அசைவத்துக்கும் காஞ்சியில் இடம் உண்டு. அனைத்துத் தரப்பினரையும் தன்னுடைய தம் பிரியாணி சுவையால் கவர்ந்துள்ளார் ரோஷன் பீபீ. தள்ளாத வயதிலும் பாரம்பரிய முறையில் தம் பிரியாணி செய்துவரும் அவர், அதன் செய்முறையை பகிர்ந்துகொள்கிறார்.

சீரகச் சம்பா அரிசி -1 கிலோ

மட்டன் அல்லது சிக்கன் - ஒன்றரை கிலோ

வெங்காயம், தக்காளி - தலா அரை கிலோ

பூண்டு - 100 கிராம்

இஞ்சி - 100 கிராம்

லவங்கம், பட்டை, ஏலக்காய் - சிறிதளவு

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

எலுமிச்சை பழம் -1

புதினா, கொத்தமல்லி - அரைக்கட்டு

தயிர் -200 கிராம்

எண்ணெய் - 300 கிராம்

உப்பு - தேவைக்கேற்ப

விறகு அடுப்பில் அலுமினிய டபராவை வைத்துச் சூடேறியதும் எண்ணெய்யை ஊற்றி, லவங்கம், பட்டை, ஏலக்காய் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். பிறகு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி, தக்காளியைச் சேர்ந்து இரண்டு நிமிடம் வதக்குங்கள். சுத்தம் செய்துவைத்துள்ள இறைச்சியை அதில் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவையுங்கள். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கியதும் புதினா, தயிர், கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் வதக்குங்கள். பின்னர், தனி மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாகக் கிளறி அதனுடன் ஒன்றரை லிட்டர் தண்ணீர் சேர்த்து இருபது நிமிடம் கிளறுங்கள். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதற்குள் மற்றொரு பாத்திரத்தில் அரிசியை அரை வேக்காட்டில் வேகவைத்துகொள்ள வேண்டும். அதில் எலுமிச்சைப் பழத்தைப் பிழிய வேண்டும். இப்படிச் செய்வதால் சாதம் உடையாமல் இருக்கும். வெந்த அரிசியைத் தயாரித்துவைத்திருக்கும் மசாலா கலவையுடன் கலந்து சாதம் உடையாமல் கிளறுங்கள். பின்னர், பாத்திரத்தின் உள்ளே காற்றுப் புகாதபடி துணியைச் சுற்றி அதை அலுமினியத் தட்டால் மூட வேண்டும். அலுமினிய தட்டின் மீது அடுப்பில் உள்ள நெருப்புத் துண்டுகளைப் போட்டு அரை மணி நேரம் தம் போட வேண்டும். பின்னர், திறந்து பார்த்தால் மணக்கும் தம் பிரியாணி தயார்.

SCROLL FOR NEXT